யோகிபாபு படத்துக்கு தூக்குதுரை என்ற பெயர் எப்படி வந்தது? – இயக்குநர் பேட்டி
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ட்ரிப்.டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருந்த அந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார் யோகிபாபு.
இப்போது மீண்டும் டென்னிஸ் மஞ்சுநாத் – யோகிபாபு கூட்டணி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் தயாராகியிருக்கும் படம் ‘தூக்குதுரை’.
இந்தப்படத்தில் யோகிபாபுக்கு இணையராக இனியா நடித்திருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜு, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றிபிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரவி வர்மா.கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.மனோஜ் இசையமைத்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, ஜெய்முருகன் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். மான்ஸ்டர் முகேஷ் மற்றும் ராம்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அறிவுமதி மற்றும் மோகன்ராஜன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை வினோத் குமார் தங்கராஜு கவனிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
தூக்குதுரை படம் குறித்துப்பேச இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்தைச் சந்தித்தோம்.
1.விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் பெயர் தூக்குதுரை என்பதால் இந்தப் பெயரை வைத்தீர்களா?
இந்தப் படத்தின் கதை,18 ஆம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2023 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கிற மாதிரி எழுதப்பட்டுள்ளது.அதனால் படத்துக்கு, மாமன்னன், மன்னாதி மன்னன் போன்ற தலைப்புகளை வைக்க முயன்றோம். ஆனால், ‘மாமன்னன்’ என்ற தலைப்பு ஏற்கனவே இருந்ததால், அது சார்ந்த எந்த ஒரு தலைப்பும் வைக்க முடியாத நிலை.வேறு தலைப்பை வைக்க யோசித்தபோது, அக்காலத்தில், இளவரசர்களை துரை என்றும் அழைப்பார்கள். மன்னர்களின் முக்கிய அடையாளம் அவருடைய மகுடம்,அதைத் தூக்கிக் காண்பிக்கும் போது மக்கள் வணங்குவார்கள், அதனால் தூக்குதுரை என்று வைக்க முடிவு செய்தோம்.
இந்தப்பெயர் பிரபலமான பெயர் என்பதால் வைத்துவிட்டோம்.எனவே உடனடியாக மக்களிடம் இந்தப்பெயர் சென்று சேர்ந்திருக்கிறது.
2.இந்தப்படத்தின் கதை பற்றிச் சொல்லுங்கள்..?
அக்காலத்தில் மன்னராக வாழ்ந்தவர்களின் தலைமுறையினர் தற்போது சாதாரண குடிமகனாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இருந்தாலும், அவர்களின் தலைமையில் தான் ஊர் கோயில் திருவிழாக்கள் நடக்கும்.அப்படிப்பட்ட ஒரு குடும்பம், அந்தக் குடும்பம் தொடர்புடைய கோயில் திருவிழாவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தியது தான் இந்தப்படத்தின் கதை. ராஜா பரம்பரை, 18 ஆம் நூற்றாண்டு என்பதால் படத்தில் எதாவது சர்ச்சையான விசயத்தைப் பேசியிருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட படம் மட்டுமே. மன்னர் காலத்துக் கதை ஒன்றைக் களமாகக் கொண்டு சொல்லியிருக்கிறோம்.அந்தக் கதையை அனிமேஷனில் தான் சொல்லியிருக்கிறோம்.
இதில் யோகிபாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். அந்த ஊரின் ராஜகுடும்பத்து வாரிசாக மாரிமுத்து நடித்திருக்கிறார், அவரது தம்பியாக நமோ நாராயணன் நடித்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், புதுமுகம் அஷ்வின், மொட்டை ராஜேந்திரன், சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
3.யோகிபாபுவுக்கு இணையராக இனியா நடித்திருக்கிறாரல்லவா? இவர்களுடைய காதல்காட்சிகள் எப்படி அமைந்திருக்கின்றன?
படத்தில், இரண்டு பேருக்கும் இடையே காதல் காட்சிகள் இருக்கின்றன. ஆனால், பாடல் காட்சிகள் இல்லை. என்றார். யோகி பாபு – இனியா காதலால் தான் பிரச்சனை வரும், அந்த பிரச்சனை எப்படிப் போய் முடிகிறது என்பது தான் கதை. இருவரும் அதற்கேற்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.
4.யோகிபாபுவைப் பற்றிப் பல புகார்கள் வருகின்றனவே? உங்கள் படத்தில் எப்படி.?
யோகி பாபுவால் எங்களுக்கு எந்தச் சிக்கலும் வந்ததில்லை. அவர் கொடுத்த தேதிகளை நாங்கள் சரியாகப் பயன்படுத்தினோம், அவரும் எங்களுக்கு நல்லபடியாக ஒத்துழைப்பு கொடுத்தார்.உங்க படம் மட்டும் எப்படி பிரச்சனை இல்லாம போகுது என்று பலர் என்னிடமே கேட்டிருக்கிறார்கள். நான் யோகிபாபு நடித்த படங்களில் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறேன். அதனால் அவரை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். ட்ரிப் படத்திலும் எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது, இந்தப் படத்திலும் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தார்.
5.ட்ரிப் படத்தின் கதையிலும் நகைச்சுவை மையமாக இருக்கும், இந்தப்படத்திலும் நகைச்சுவையையே மையமாக வைத்திருக்கிறீர்கள். இதுதான் உங்கள் பாணியா?
அட்வெஞ்சர் த்ரில்லர் கதையான ‘ட்ரிப்’ படத்தை நகைச்சுவையாகச் சொல்லியிடுந்தேன்,அது இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதையாக இருந்தாலும் இதையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகக் கையாண்டிருக்கிறேன். இதுவும் இரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
– குமார்











