இழுபறியில் ஜனநாயகன் வியாபாரம் – தவிக்கும் தயாரிப்புநிறுவனம்
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது.
இந்தப்படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலை சுமார் 120 கோடி.விஜய்யின் முந்தைய படமான தி கோட் தமிழ்நாட்டில் சுமார் 103 கோடி தயாரிப்பாளரின் பங்காகக் கொடுத்தது என்பதால் ஜனநாயகன் விலை 120 கோடி என்பது நிறுவனத்தின் கணக்காக இருந்தது.
ஆனால், இந்த விலை அதிகம் என்று சொல்லி யாரும் வாங்க முன்வரவில்லை.
இதனால், விஜய்யுடன் இருக்கும் ஜெகதீஷ் என்பவர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலை அழைத்துக் கொண்டுபோய், விஜய் இவருக்கு தமிழ்நாடு உரிமையைக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாடு உரிமை சுமார் 87 கோடி என்று விலைபேசி அதில், ஐம்பது கோடி முன் தொகை கொடுத்தால் ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் ராகுலால் சொன்னபடி பணம் கொடுக்க முடியவில்லையாம்.அதனால் அவருக்குப் படம் கொடுக்காமல் படத்தைப் பிரித்து விற்கும் முடிவை எடுத்தார்கள்.
அதன்படி, சென்னை உரிமை சுமார் 8 கோடிக்கு தேனாண்டாள் முரளியின் உறவினர் ராமு பெற்றிருக்கிறார்.வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகள் சீனு என்பவருக்கு 14 கோடிக்கும்,திருச்சி,மதுரை,சேலம் ஆகிய மூன்று பகுதிகள் ஃபைவ் ஸ்டார் செந்தில் நாராயணசாமி ஆகியோருக்கு சுமார் 35 கோடிக்கும் கோவை பகுதி மன்னார் என்பவருக்கு சுமார் 16 கோடிக்கும் திருநெல்வேலி பிரதாப் என்பவருக்கு சுமார் 7 கோடிக்கும் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
அப்போதே, செங்கல்பட்டுக்கு சுமார் 25 கோடி விலை சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பின்,திருச்சி,மதுரை,சேலம் ஆகிய பகுதிகளுக்கு ஃபைவ் ஸ்டார் செந்தில் – நாராயணசாமி ஆகியோரும், வட ஆற்காடு, தென்னாற்காடு, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு எஸ் பிக்சர்ஸ் சீனுவும் ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம்.
சென்னை உரிமையை வாங்கிக் கொள்வதாகச் சொன்ன கற்பக விநாயகா நிறுவனம், விலை அதிகம் என்று சொல்லி பின்வாங்கிக் கொண்டதாம்.
இதனால், சென்னை செங்கல்பட்டு ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து 33 கோடி என்றிருந்ததை குறைத்து 31 கோடிக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
சில விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும இதுவரை யாரும் வாங்கவில்லை.
கடைசி நேர இழுபறியால் தவித்துக் கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.











