சினிமா செய்திகள்

சிம்பு படத்தில் ஜாக்கிசான் – புதிய தகவல்

கமலுடன் இணைந்து சிம்பு நடித்துள்ள தக்லைஃப் ஜூன் 5 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.இதைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அதைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கங்களில் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தக்லைஃப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதியபடத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

இவற்றைத் தாண்டி சிம்பு நடிக்கவிருக்கும் இன்னொரு படம் குறித்தும் பேச்சுகள் அடிபடுகின்றன.

2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 2018.அந்தப்படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.இப்படத்தில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறதாம்.இந்தக் கதையில் கதாநாயகனுக்கு இணையான இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறதெனவும் அந்தக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

அந்தப் பேச்சுகள் வந்ததற்குப் பிறகுதான் எஸ்டிஆர் 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகின.அவற்றில் ஜூட் ஆண்டனி ஜோசப் இல்லையென்பதால் அவர் படம் இல்லை என்கிற பேச்சும் வந்துவிட்டது.ஆனால் அந்தப்படம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறதென்கிறார்கள்.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தைத் தயாரிப்பது யார்? என்கிற பேச்சுவார்த்த்தை நினைத்தபடி நடக்காததால் அப்படம் குறித்து அறிவிக்கப்படவில்லையாம்.

அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைகளில், இந்தப் படத்தைத் தயாரிக்க சரியான தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அவர்களிடம் கொடுப்போம் இல்லையெனில் நானே தயாரிக்கிறேன் என்று சிம்பு அந்த இயக்குநரிடம் சொல்லியிருக்கிறாராம்.

அதோடு அந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உலகப்புகழ் ஜாக்கிசானை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதுதொடர்பாக ஜாக்கிசானை சந்தித்துப் பேசியிருக்கிறாராம் சிம்பு.அவரும் படம் தொடங்கும் போது சூழல் சரியாக அமைந்தால் நடிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

அதனால், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் எல்லாப் படங்களையும் திட்டமிட்டபடி வேகமாக முடிக்க தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம் சிம்பு.

இதெல்லாம் திட்டமிட்டபடி சரியாகப் போய்க் கொண்டிருக்கும்போது ஒரு சுபயோக சுபதினத்தில் சிம்பு – ஜூட் ஆண்டனி ஜோசப் இணையும் படத்தின் அறிவிப்பும் அதில் ஜாக்கிசான் நடிப்பது பற்றியும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களாம்.

Related Posts