இந்தியன் 2 – திரைப்பட விமர்சனம்
இலஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் இலஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றவர் இந்தியன் தாத்தா.இந்தியன் முதல் பாகத்தின் இறுதிக்காட்சி இது.
இப்போது வந்திருக்கும் இரண்டாம் பாகத்தில்,சமூக வலைதளங்கள் மூலம் கம்பேக் இந்தியன் என்று பலர் அவரை அழைக்கிறார்கள்.அதனால் அவர் திரும்ப வருகிறார்.வந்து இலஞ்ச ஊழல்களில் திளைக்கும் பெரும்புள்ளிகளைப் போட்டுத் தள்ளுகிறார். இதனால் மேலும் கூடுதலாக அவருக்கு வரவேற்பு கிடைக்க வேண்டுமல்லவா? அப்படிக் கிடைக்கவில்லை. மாறாக கோபேக் இந்தியன் அதாவது திரும்பிப்போ இந்தியன் என்கிற குரல் எழுகிறது.
அது ஏன்?
என்பதற்கான விடைதான் இந்தியன் 2.
படம் தொடங்கி சுமார் அரைமணி நேரத்துக்குப் பிறகு திரையில் தோன்றும் இந்தியன் தாத்தாவின் கைக்கே அரங்கம் அதிர்கிறது.அதன்பின் சில பல நிமிடங்கள் கழித்து வருகிறார்.இந்தியன் தாத்தா என்கிற வேடத்தின் தன்மையை தன் தேர்ந்த நடிப்பின் மூலம் பன்மடங்கு அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறார் கமல்.இந்த பாகத்தில் பலவித தோற்றங்களில் வருகிறார்.அவை திரைக்கதைக்குப் பலம் அவருடைய இரசிகர்களுக்கு விருந்து.
சித்தார்த்,பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத்சிங், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா,பாபி சிம்ஹா,ஜெகன்,ரிஷி என ஏராளமானோர் படத்தில் இருக்கிறார்கள். மறைந்த நடிகர்கள் விவேக்,நெடுமுடிவேணு,மனோபாலா உள்ளிட்டோரைய் பார்க்கும்போது கலக்கம்.எல்லோரும் அவரவர் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
சித்தார்த்துக்கு அதிகக் காட்சிகள் இருப்பது பலவீனம்.சமுத்திரக்கனியின் வேடமும் காட்சிகளும் பலம்.
அனிருத் இசையமைத்திருக்கிறார்.இந்தியன் முதல்பாகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படத்தில் பாடல்களே இல்லை என்கிற உணர்வுதாம் வரும்.புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு தாத்தா வர்றாரே துள்ளல்.காலண்டர் பாடல் காட்சிக்கு இனிமை.பின்னணி இசையில் அனிருத்தின் பாணி சில இடங்களில் நன்று.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்துக்குப் பெரிய பலமாக இருக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் பலவீனங்களைத் தம் காட்சிகளால் மறைத்திருக்கிறார்.
கலை இயக்குநர் முத்துராஜ் உழைப்பில், பணத்தில் புரளும் பகட்டுக்காரர்கள் மாளிகை உட்பட நாம் வாழ்நாளில் பார்க்கவே முடியாத பல இடங்களைப் படத்தில் காணமுடிகிறது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோரால் இப்படம் பெரும் பணத்தால் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிகிறது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத் படத்தின் உணர்வு கெடாமல் குறைத்திருக்க வேண்டிய பல காட்சிகளை அப்படியே விட்டிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகிய மூவர் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.அதனால் பேச்சு அதிகம் என்கிற எண்ணம் வருகிறது.இது பல கூர்மையான வசனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஷங்கர்,சொல்லும் கருத்தை விட காட்சிகள் பெரிதாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பது குறை.இலஞ்ச ஊழல் விவகாரங்களில் இன்றைய இந்தியாவைப் படம் பிடித்திருக்கிறார்.வடமாநிலங்களில் நடக்கும் கற்பனைக்கெட்டாத இலஞ்ச ஊழல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.அம்மணமாய்த் திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் எனும் முதுமொழியை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதியிருப்பது மூன்றாம் பாகத்துக்கான முன்னுரையாக அமைந்திருக்கிறது.
இலஞ்சம் கொடுக்கிறோம் இது தவறு என்கிற எண்ணம் கூட இல்லாமல் அது ஓர் இயற்கை நிகழ்வு என்று நினைத்துக் கொண்டிருக்கும் வெகுமக்கள் மனநிலையை அடித்து உடைக்க முயன்றிருக்கிறது இப்படம்.
– ஆநிரையன்