சினிமா செய்திகள்

சொன்ன தேதியில் வெளியாகாது இட்லிகடை – காரணம் என்ன?

நடிகர் தனுஷ் தற்போது, இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

இப்பட்த்தின் படப்பிடிப்பு, தேனி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது என்றும் மீதிப்படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள்.

ஆனால்,இப்போது அந்தத் தேதியில் படம் வெளியாகாது என்று சொல்கிறார்கள்.அதற்குக் காரணம், இந்தப்பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அஜீத் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியானது.

அதனால்,அஜீத் படம் வருகிற நேரத்தில் தனுஷ் படம் வந்தால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கருத்து தெரிவித்தனராம்.இதனால் இட்லி கடை படத்தைத் தள்ளி வைக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

இதனால் அஜீத் படத்தைப் பார்த்து தனுஷ் படக்குழு பயந்துவிட்டது என்கிற கருத்துகளும் உள்ளுக்குள் பேசப்பட்ட்டுக் கொண்டிருந்தன.

அதேநேரம், இட்லி கடை வெளியீடு தள்ளிப்போவது உண்மைதான் ஆனால் அதற்குக் காரணம் அஜீத் படமல்ல என்று இட்லிகடை படக்குழு தரப்பில் உலா வரும் தகவல் தெரிவிக்கிறது.

அப்படியானால் தள்ளிப்போக என்ன காரணம்?

ஏனெனில் ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு இரண்டு மாதங்கள் தான் முழுமையாக இருக்கிறது.அதற்குள் படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் முடிவடைவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சுமார் இருபத்தைந்து நாட்கள் வரை நடத்த வேண்டியிருக்கிறதாம்.அது இப்போதிருந்து நடந்தாலே படப்பிடிப்புக்குப் பிறகான பணிகளுக்கு நாட்கள் போதாது என்கிற நிலை இருக்கிறது.இந்நிலையில் படத்தின் நாயகி நித்யா மேனன் தேதிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக படப்பிடிப்பு நாட்கள் குறித்த எந்த உறுதியுமில்லாமல் இருக்கிறது.

இந்தக் காரணங்களால், அறிவித்த வெளியீட்டுத் தேதியான ஏப்ரல் 10 ஆம் தேதி நிச்சயம் படம் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம் வெளியீட்டுத் தேதியை கால வரையற்று தள்ளி வைக்காமல் இரண்டு வாரங்கள் தள்ளி ஏப்ரல் 24 ஆம் தேதி இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ற்படி வேலைகளை வேகப்படுத்தியிருக்கிறார்களாம்.

Related Posts