இயக்குநர் தயாரிப்பாளர் மோதல் – சிக்கலில் மதராஸி படம்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மதராஸி. இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
தென்னிந்தியா இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாசுடன் இணைந்துள்ளார் வித்யூத் ஜமால். மேலும் பிஜு மேனன், விக்ராந்த், சார்பட்டா புகழ் டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்திகுப்புப் பணிகளை கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை கெவின் குமார் மற்றும் மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கிறார்கள்.
ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் சார்பில் என். ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் எனும் இந்திப்படத்தின் வேலைகள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
சிக்கந்தர் படம் ரம்ஜானை முன்னிட்டு இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் மதராஸி படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து இயக்குநர் முருகதாசிடம் பேச முயன்றிருக்கிறார் தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத்.பலமுறை அவர் கைபேசியில் அழைத்தும் முருகதாஸ் அவரிடம் பேசவில்லையாம்.
இதனால் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்கே நேரில் சென்றுவிட்டாராம் தயாரிப்பாளர்.
அவர் நேரில் வந்ததை அறிந்து முருகதாஸ் கோபமாகிவிட்டாராம்.இந்தப் படத்துக்கு இதுவரை ஆன செலவைக் கணக்குப் போட்டுச் சொல்லுங்கள்,அதை நாங்கள் கொடுத்துவிடுகிறோம் நாங்கள் வேறு தயாரிப்பாளரை வைத்துப் படத்தை முடித்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
இதைக்கேட்ட தயாரிப்பாளர் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.இவ்வளவு கோபம் எதற்கு? பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் நான் தானே வாய்ப்பு கொடுத்தேன் என்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என்று தெரியவில்லையே எனப் புலம்பியிருக்கிறார்.
படத்தைத் தொடங்குகிற நேரத்திலும் அதன்பின் பல சந்தர்ப்பங்களிலும் இயக்குநரின் மதிப்பு தெரியாமல் அவரை அலட்சியப்படுத்தினார்கள் இப்போது அதன் பலனை அனுபவிக்கிறார்கள் என்கிற பேச்சும் இருக்கிறது.
எதனால் இந்த இடைவெளி? என்பதும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் மட்டுமே முழுமையாகத் தெரியும்.
இப்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் பட்ப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகள் தொடங்கிவிட்டது என்று சொல்கிறார்கள்.
நல்லபடி நடக்கட்டும்.வெற்றி நல்ல படம் கிடைக்கட்டும்.