சினிமா செய்திகள்

விஜய்க்கு காவி கட்டி விட்டுட்டாங்களே – பிகில் முதலிரு பார்வைகள் குறித்த பார்வை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘தெறி, மெர்சல்’ படங்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா, ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இது விஜய்க்கு 63 ஆவது படம் ஆகும்.

இந்தப் படத்தில் அவர், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வெறித்தனம், மைக்கேல் உள்ளிட்ட சில பெயர்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் ஜூன் 21 மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்யின் 63 ஆவது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘பிகில்’ என்றால் ‘விசில்’ என்றும் அர்த்தம் உண்டு.

படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் தந்தை-மகன் என இரு வேடங்களில் விஜய் இருக்கிறார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கால்பந்தாட்ட வீரர் சீருடையில் மகன் விஜய் உள்ளார். தந்தை விஜய், வேட்டி-சட்டையில் நாற்காலி ஒன்றில் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கிறார்.

அவருக்கு முன்னால் மீன் வெட்டும் பெரிய கத்தி உள்ளது. மீன் சந்தையில் இருவரும் இருப்பது போல் இந்த தோற்றம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. இதில் நான்கு விஜய்யின் நான்கு படங்கள் இடம்பெற்றுள்ளன.

காவி வேட்டி கட்டிய விஜய், கோட் சூட் போட்ட விஜய், கால்பந்து விளையாட்டு உடையில் விஜய் ஆகிய தோற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இரண்டு தோற்றங்களிலும் விஜய் கட்டியிருக்கும் வேட்டி காவி வண்ணத்தில் இருக்கிறது. அவர் சிலுவை அணிந்திருக்கிறார். இருந்தாலும் விஜய்க்கும் காவி கட்டி விட்டுட்டாங்களே என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

Related Posts