சினிமா செய்திகள்

ஜீவா அருள்நிதி ஆகியோரில் யாருக்கு முக்கியத்துவம் ?- களத்தில் சந்திப்போம் இயக்குநர் பேட்டி

ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் படம் களத்தில் சந்திப்போம். நாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி,ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் .

இப்படம் பிப்ரவரி ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் என்.ராஜசேகரிடம் ஓர் உரையாடல்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..?

சொந்த ஊர் காரைக்குடி. படித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்தேன். திரைப்படங்களின் மீதிருந்த ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு உதவி இயக்குநராக முயன்றேன். பல முயற்சிகளுக்குப் பிறகு இயக்குநர் எழில் சாரிடம் சேர்ந்தேன்.

மனம்கொத்திப்பறவை நான் பணிபுரிந்த முதல்படம். அதிலேயே எனக்கு அசோசியேட் இயக்குநர் என்ற பொறுப்பு தந்தார் எழில் சார்.அதன்பின் எழில்சார் இயக்கிய தேசிங்குராஜா படத்தில் பணியாற்றியதோடு அப்படத்துக்கு வசனங்களையும் எழுதினேன்.

2. இயக்குநரானது எப்படி..?

தேசிங்குராஜா படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மாப்ள சிங்கம் தான் என் முதல்படம்.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் சாரிடம் மேனேஜர் சார்லஸ் சார் அழைத்துச் சென்றார். மதன் சாருக்கு நான் சொன்ன கதை பிடித்தது. அதனால் மாப்ள சிங்கம் படம் உருவானது.

அந்தப்படம் வெளிவருமுன்பே திருட்டு விசிடி வந்தது உட்பட பல சிக்கல்களைச் சந்தித்தது. அதனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

அப்படம் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல முறை ஒளிபரப்பப்படுகிறது. அப்போதெல்லாம் பார்த்துவிட்டுப் ப்லர் பாராட்டுவார்கள்.

ஆனால், தயாரிப்பாளருக்கு இலாபம் கொடுத்திருந்தால்தானே வெற்றி. அது நடக்கவில்லை.

3.களத்தில் சந்திப்போம் பட வாய்ப்பு கிடைத்தது பற்றி..?

மாப்ள சிங்கம் படத்துக்குப் பிறகு பல முயற்சிகள் செய்தேன். அப்போது ஜீவா சாரை சந்தித்து ஒரு கதை சொன்னேன்.அவருக்கு மிகவும் பிடித்தது. அவரே செளத்ரி சாரிடம் என்னைக் கூட்டிப்போனார். அவரும் கதை கேட்டு பிடித்திருக்கிறது என்றார்.

அந்தக்கதை ஒரு கதாநாயகன் உள்ள கதை. அதில் ஜீவா சார் மட்டும் நடிப்பதாக இருந்தது.அப்போது ஜிப்ஸி படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்துக்காக நீளமாக முடிவளர்த்திருந்தார். அதனால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமானது.

அந்த நேரத்தில் கன்னடத்தில் ஒரு படம் செய்ய கதை இருக்கிறதா? என செளத்ரி சார் கேட்டார். அப்போது சொன்னதுதான் இந்தக் கதை. இதைக்கேட்ட செளத்ரி சார் இதையே முதலில் எடுக்கலாம் என்று சொன்னார். ஜீவா சாரும் ஒப்புக் கொண்டார்.

4. அருள்நிதி ஒப்பந்தமானது எப்படி?

இரண்டு நாயகர்கள் படம் என்பதால் அருள்நிதி ஒப்புக்கொள்வாரா? என்கிற சந்தேகம் இருந்தது. ஜீவா சாரே அவரிடம் பேசினார். அவரும் கதை கேட்டு ஒப்புக்கொண்டார்.

Kalathil Santhippom

Kalathil Santhippom

5. இரண்டு நாயகர்கள் இருந்தால் யாருக்கு முக்கியத்துவம் என்கிற போட்டி வருமே? படப்பிடிப்பு எப்படியிருந்தது?

கதையில் இருவருக்குமே சம அளவு வாய்ப்பு இருந்தது. அதனால்தான் இருவருமே ஒப்புக் கொண்டனர். அதனால் படப்பிடிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை. எல்லாம் சுமுகமாக நடந்தது.

6.படம் தாமதமானது ஏன்?

இப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஏப்ரல் வாக்கிலேயே முடிந்துவிட்டது.அந்த நேரத்தில் ஜீவா சார் 1983 படத்தில் நடிக்கப்போனதால் போஸ்ட் புரொடக்‌ஷன் கொஞ்சம் தாமதம் ஆனது. அது முடிந்து படம் வெளியிட நினைத்த நேரத்தில் கொரோனா வந்துவிட்டது.

7. சனவரி 28 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.பிப்ரவரி 5 ஆம் தேதிக்குப் போனது ஏன்?

இப்படத்துக்கு சுமார் 350 தியேட்டர்கள் வேண்டும் என்று செளத்ரி சார் சொல்லியிருந்தார். பிப்ரவரி 5 ஆம் தேதியில் தான் அவ்வளவு தியேட்டர்கள் கிடைத்தன. அதனால் அப்போது வெளீயிடவிருக்கிறோம்.

8.அடுத்து…?

ஜீவா சாருக்கு முதலில் சொன்ன கதையை வைத்து அடுத்த படம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். இன்னொரு பக்கம் அருள்நிதி சாருக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அவரும் நடிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இப்பட வெளீயீட்டுக்குப் பின் அடுத்த எது? எப்போது தொடங்குவது? என்பதைப் பற்றிச் சொல்கிறேன்.

– அ.தமிழன்பன்

Related Posts