இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும்.
உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு நிறுவனம், சொன்னபடி அவற்றைச் செயலிழக்கச் செய்யாமல் கடலில் போட்டுவிடுகிறது.
அப்படிப் போடப்பட்ட குண்டுகள் கரை ஒதுங்கினால், அதை யாராவது எடுத்து, குண்டு என்ரு தெரியாமல் பழைய இரும்புக்கடையில் போடுகிறார்கள். அவை வெடித்து பல நூறு உயிர்கள் பலியாகின்றன.
அப்படி ஒரு குண்டை வைத்துக் கொண்டு காதல், நட்பு, பாசம் ஆகிய எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம்.
பழைய இரும்புக்கடையில் சுமையுந்து ஓட்டுகிறார் நாயகன் தினேஷ். முந்தைய படங்களைக் காட்டிலும் கொஞ்சம் குண்டாகியிருக்கிறார். வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்.
வீட்டை எதிர்த்து காதலனோடு சேரத் துடிக்கும் வேடத்தில் நாயகி ஆனந்தி நடித்திருக்கிறார். தொடக்கம் முதல் கடைசிவரை அவ்வளவு பொருத்தம். திருமண வீட்டிலிருந்து அண்ணியை அறைந்து கீழே தள்ளிவிட்டு கம்பீரமாக அவர் நடந்துவரும் காட்சி மிகச்சிறப்பு.
குண்டு தொடர்பான ரகசியத்தை வெளியே கொண்டுவரப் போராடும் பத்திரிகையாளராக ரித்விகா நடித்திருக்கிறார். அவரும் சரண்யாரவியும் இணைந்து செய்யும் பயணங்கள் ஊடகத்துறையினரின் உத்வேகத்துக்கு சிறந்த சான்று.
சுப்பையாசாமி என்கிற பஞ்சர் ஆக் நடித்திருக்கும் முனீஷ்காந்த், படத்துக்குப் பலம். கடினமான காட்சிகளை நகைச்சுவையால் எளிதாக்குகிறார்.
மாரிமுத்து, ஜான்விஜய்,ரமேஷ்திலக்,ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு கதைக்களத்தின் தன்மையை பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்துகிறது.
கலை இயக்குநர் இராமலிங்கத்தின் உழைப்பு, இரும்புக்கடை உலகத்தை பட்டவர்த்தனமாக நமக்குக் காட்டுகின்றது.
டென்மாவின் இசை படத்துக்குப் பலம். மாவுலியோ, அங்கே இடி முழங்குது உள்ளிட்ட பாடல்கள் கேட்க நன்று. பின்னணி இசையும் பொருத்தம்.
உலக அளவிலான ஆயுத வியாபாரம், இந்திய அளவிலான பெரும் ஊழல் ஆகியவற்றையும் ஒரு எளிய மனிதன் தன் அப்பாவின் ஆசைப்படி ஒரு சுமையுந்து வாங்குவது இடைநிலை சாதி பெண்ணைக் காதலித்து கைப்பிடிப்பது ஆகியவற்றோடு கலந்து சொல்லியிருப்பது நன்று.
அந்த குண்டு எப்போது வெடிக்குமோ என்கிற பதட்டம் இழையோடிக் கொண்டே இருப்பது திரைக்கதையின் பலம்.
உனக்கும் எனக்கும் சேர்ந்து ஒருத்தன் வந்துட்டான், அந்த குண்டு வெடிச்சா எல்லோரும் போய்ச்சேருவோம் என்கிற வசனத்தின் மூலம் இந்தச்சமுதாயத்துக்கும் பெரும் செய்தி சொல்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
சமகால பாதுகாப்பு அமைச்சரே பெரும் ஊழல்வாதி என்று காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.
ஆதிக்க சாதி மனநிலை, அதிகார அத்துமீறல் ஆகியனவற்றுக்கு எதிராக வெடித்திருக்கிறது இந்த குண்டு.