சினிமா செய்திகள்

கேம்சேஞ்சர் படத்துக்குத் தமிழில் தடை? – பரபரக்கும் தகவல்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார்.

இப்படம் 2025 பொங்கல் நாளையொட்டி சனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட பல் மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் தமிழில் இப்படம் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அது என்ன சிக்கல்?

இந்தப் படத்துக்கு முன்பாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் வெளியானது.அப்படம் தோல்வி அடைந்தது.அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் பெரும் நட்டம் அடைந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்படத்தின் இன்னொரு பாகமாக இந்தியன் 3 தயாராகியிருக்கிறது.அந்தப் படம் தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.

மூன்றாம் பாகத்துக்காக ஒரு பாடல் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் சொல்கிறாராம்.அதற்குப் பெரும் செல்வாகும் என்பதால் அப்பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிடலாம் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் கருத்து.அதை அவர் ஏற்க மறுக்கிறாராம்.பாடலைச் சேர்த்தால்தான் படம் நன்றாக இருக்கும் என்பது ஷங்கர் பிடிவாதமாகச் சொல்கிறாராம்.

இதனால் படத்தைத் தொகுத்துக் காட்டுங்கள்.முக்கியமான சிலர் படம் பார்க்கட்டும்.அவர்கள் எல்லாம் பாடல் சேர்த்தாக வேண்டும் என்று சொன்னால் சேர்த்துவிடுவோம் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது.அதற்கு,அப்படியெல்லாம் படம் காட்டமுடியாது என்று கறாராகச் சொல்லியிருக்கிறார் ஷங்கர்.

இதனால் இந்தியன் 3 படத்தை முடித்து வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதுமட்டுமின்றி இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமெனில் எனக்குச் சம்பளமாக சுமார் அறுபது கோடி கொடுத்தாக வேண்டும் என்று ஷங்கர் நிபந்தனை விதித்திருக்கிறார்.சம்பளம் கொடுக்கவில்லையெனில் அந்தப் படத்தை முடித்துத் தரமாட்டேன் என்றும் சொல்லிவிட்டாராம்.

இதனால் திடுக்கிட்ட தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர்கள் சங்கம்,விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இயக்குநர் ஷங்கர் குறித்து புகார் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள்,இந்தியன் 3 படத்தை சிக்கலின்றி முடித்துக் கொடுப்பதாக ஷங்கர் ஒப்புக் கொண்டால்தான் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடுவோம் இல்லையெனில் அப்படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.இத்தகவலை கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவிடமும் சொல்லிவிட்டார்களாம்.

இதனால் அவர் பதட்டத்துடன் இயக்குநர் ஷங்கரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறாராம்.

இதைச் சற்றும் எதிர்பாராத இயக்குநர் ஷங்கர், இது தொடர்பாக தமக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் வழக்குரைஞர்களிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

இயக்குநர் ஷங்கர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? கேம்சேஞ்சர் படம் தமிழில் வெளியாகிவிடுமா? என்கிற பரபரப்பான கேள்விகளுக்கான விடை போகப் போகத் தெரியும்.

Related Posts