விடுதலை 2 படத்தில் 40 கோடி நட்டம் – தயாரிப்பாளர் அதிர்ச்சி
அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான படம் விடுதலை 2.வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,மஞ்சுவாரியர்,கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் முதல்பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.அப்படம் வெளியாகி சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.ஆனால் 20 மாதங்கள் கழித்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியானது.
முதல்பாகம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ஆனால்,இரண்டாம்பாகம் கருத்தியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.
முதல்பாகம் வெளியிடும்போதே இரண்டாம்பாகத்துக்கான தொண்ணூறு விழுக்காடு காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.இன்னும் பத்து விழுக்காடு படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்டது.
ஆனால்,படம் வெளியாகும் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு சில நாட்கள் முன்புவரை இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார் வெற்றிமாறன்.படத்தை மேலும் செழுமைப்படுத்தவே படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றும் சொல்லிக்கொண்டிருந்தாராம்.
வெற்றிமாறனின் இந்தச் செயலால் இரண்டாம் பாகத்தின் தயாரிப்புச் செலவு திட்டமிட்டதை விடப் பன்மடங்கு அதிகரித்துவிட்டது என்கிறார்கள்.
அதோடு இரண்டாம் பாகத்துக்காக மட்டும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு இருபது கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.அவர் உட்பட அனைவருக்கும் இரண்டாம் பாகத்துக்கென சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சம்பளம் மற்றும் படப்பிடிப்புச் செலவு ஆகியனவற்றால் இரண்டாம் பாகத்துக்காக மட்டும் சுமார் எழுபது கோடி செலவு ஆகியிருக்கிறது என்கிறார்கள்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை,தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு வியாபாரம் முதல்பாகத்துடனே சேர்த்து முடித்துவிட்டார்களாம்.
தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு டிஸ்டிரிபியூசன் எனப்படும் விநியோக முறையில் கொடுக்கப்பட்டது.அதன்படி சுமார் பத்திலிருந்து பனிரெண்டு கோடி கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆந்திரா,கேரளா,கர்நாடகா மற்றும் வெளிநாட்டு உரிமைகள் எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதன்மூலம் சுமார் பதினாறு கோடி கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கணக்குப்படி பார்த்தால் சுமார் நாற்பது கோடி நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.
இதனால், முதல்பாகம் பெற்ற வெற்றியால் கிடைத்த இலாபம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார்கள்.
இயக்குநர் முறையாகத் திட்டமிட்டு சொன்னபடி படத்தை முடித்துக் கொடுத்திருந்தால் இதுபோன்றதொரு நட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்திருக்காது,இப்போது பெரும் நட்டம் இதற்கு வட்டிக் கணக்குப் பார்த்தால் இன்னும் கூடுதலாகும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் வருந்திப் புலம்பிக் கொண்டிருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு.
இதுவரை இயக்கிய எல்லாப் படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை என்கிற பெருமிதத்தில் இருந்த வெற்றிமாறன் முதன்முறையாக ஒரு தோல்விப்ப்டம் அதுவும் பெருந்தோல்விப் படம் கொடுத்ததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.











