Uncategorized சினிமா செய்திகள்

டிமாண்டி காலனி 3 – தொடங்கும்போதே சர்ச்சை

அருள்நிதி நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி.இப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.அப்படம் .. வெளியானது.இரண்டாம் பாகத்திலும் அஜய்ஞானமுத்து அருள்நிதி கூட்டணியே இணைந்திருந்தது. இரண்டு பாகங்களுமே வெற்றி பெற்றன.

இதனால் இப்போது இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.

அவ்வேலைகளைத் தொடங்கும் போதே சில சர்ச்சைகள் உருவாகிவிட்டன.

அவை என்ன?

இந்தப்படத்தின் இரண்டாம்பாகத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் மொத்தமாக வாங்கி வெளியிட்டது.அந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக அமைந்த இந்தப்படம் வெற்றிப்படமாக இருந்தது.

இதனால் இப்படத்தின் அடுத்த பாகத்தைத் தயாரிக்க அந்நிறுவனம் முன்வந்தது.

அந்நிறுவனத்திடம் முதல்பிரதி அடிப்படையில் படத்தை நானே தயாரித்துத் தருகிறேன் என்று இயக்குநர் அஜய்ஞானமுத்து கூறியிருக்கிறார்.

அவர்களும் சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அது நடக்கவில்லை.

ஏனெனில்? முதல்பிரதிக்காக அஜய்ஞானமுத்து கேட்ட தொகை சுமார் 35 கோடியாம்.அதோடு இலாபத்தில் தனக்கு 20 விழுக்காடு படத்தின் முதல்பாகத்தைத் தயாரித்த அருள்நிதிக்கு 20 விழுக்காடு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான அந்நிறுவனம்,முதல்பிரதிக்காக 35 கோடி தருவதாகச் சொல்லியிருக்கிறது.அதை அஜய்ஞானமுத்து ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

இதனால் மூன்றாம்பாகத்தைத் தயாரிக்க வேறு தயாரிப்பு நிறுவனங்களைத் தேடியிருக்கிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து.

அந்தத் தேடலில், மும்பையைச் சேர்ந்த கோல்டு மைன்ஸ் நிறுவனம் கிடைத்திருக்கிறது.இப்போது அந்த நிறுவனமே தமிழ்நாட்டின் பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து மூன்றாம் பாகத்தைத் தயாரிக்கவிருக்கிறது.

இப்போது அதே தொகை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால்? இல்லையாம்.

முதல்பிரதிக்காக முப்பது கோடி ரூபாயும் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டில் கிடைக்கும் இலாபத்தில் 20 விழுக்காடும் தர கோல்டு மைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதை அஜய்ஞானமுத்து ஏற்றுக்கொண்டு வேலைகளைத் தொடங்கிவிட்டாராம்.இதனால் இரண்டாம்பாகத்தை வெளியிட்ட பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முதலிரண்டு பாகங்களை சென்னையிலேயே எடுத்த அவர்,மூன்றாம் பாகத்தை மொத்தமும் வெளிநாட்டிலேயே எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.

அதற்கேற்றாற்போலவே கதையையும் எழுதியிருக்கிறார் என்கிறார்கள்.

கிறித்துவ அமைப்புகள் குறித்த விமர்சனங்கள் அடங்கியதுபோல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை வெளிநாட்டில் படமாக்கினால் பொருத்தமாக இருக்கும் என்பது அவர்கள் திட்டம்.

இதற்காக ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.அதற்கேற்ற இடங்களைத் தேர்வு செய்வதற்காக தன் குழுவினருடன் அங்கு சென்றிருக்கிறாராம் இயக்குநர் அஜய்ஞானமுத்து.

அவர் சென்னை திரும்பியதும் டிமாண்டி காலனி மூன்றாம்பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் உடனடியாகப் படப்பிடிப்பும் தொடங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts