விமர்சனம்

திரெளபதி 2 – திரைப்பட விமர்சனம்

மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர்.

ஹோய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர். கி.பி 1291 இல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு. இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.

இந்த வரலாற்றுடன் சில கற்பனைகளயும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் திரெளபதி 2.

வீரவல்லாள மன்னர் மற்றும் அவரது படைத்தலைவர் வீரசிம்ம காடவராயர் ஆகியோரை மையப்படுத்தியும்,அப்போது மதுரையில் இருந்த கில்ஜி படை மக்களை மதம் மாறச் சொல்லி கொடுமைகளை செய்து வந்தன என்றும், டெல்லியில் இருக்கும் துக்ளக்கும் இங்கு வருகிறார் என்றும்,ஒரு கட்டத்தில் எதிரிகளின் துரோகத்தால் மன்னர் இறக்க,மக்களைக் காக்கும் பொறுப்பு காடவராயனுக்கு வருகிறது. காடவாராயர், துக்ளக், கில்ஜி ஆகிய எதிரிகளைக் கொன்று மக்களைக் காப்பாற்றினாரா? என்பதே கதை.

வீர வல்லாள மன்னராக நட்டியும் காடவராயராக ரிச்சர்ட் ரிஷியும் நடித்திருக்கிறார்கள்.மன்னருக்கான கம்பீரத்தோடு நட்டியும் படைத்தலைவருக்கான வீரத்தோடு ரிச்சர்ட்டும் இருக்கிறார்கள்.

படத்தின் தலைப்பில் இருக்கும் திரெளபதியாக ரக்‌ஷனா நடித்திருக்கிறார்.படத்தில் அவர் ரிச்சர்ட்டின் மனைவி.வீரத் தமிழ்ப்பெண்களை உருவகப்படுத்தும் அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் ரக்‌ஷனா.

டெல்லி சுல்தானாக நடித்திருக்கும் சிராக் ஜானி,மதுரை தம்பானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பா ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

வேல.ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன்,சரவண சுப்பையா,பரணி உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களில் ஒன்றியிருக்கிறார்கள்.

பிலிம் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவில் வரலாற்றுக் காலகட்டத்தைக் காணமுடிகிறது.கமலின் கலை இயக்கம் அதற்குத் துணையாக அமைந்திருக்கிறது.

ஜிப்ரானின் இசையில் பக்திப்பாடல்கள் நன்று.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.

வரலாற்றுடன் சில கற்பனைகளைக் கலந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கும் மோகன் ஜி,அதற்காக நிறைய மெனக்கெட்டிருப்பது புலனாகிறது.பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பக்கூடிய கருத்து,உருவாக்கத்தில் பின்னடைவு,நீளம் அதிகம் ஆகிய குறைகளைத் தாண்டியும் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்.

– கவி

Related Posts