சினிமா செய்திகள்

சிரஞ்சீவி அழைப்பு கே.வி.ஆனந்த் மறுப்பு

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் குரல்மாற்று (டப்பிங்) செய்யப்பட்டது.

இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று (ரீமேக்) உரிமையை ராம்சரண் வாங்கியுள்ளார்.இதனால், மோகன்லால் கதாபாத்திரத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. ‘லூசிஃபர்’ தெலுங்கு மொழிமாற்றை ராம்சரண் மற்றும் என்.வி.பிரசாத் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.சிரஞ்சீவி இப்போது ‘வேதாளம்’ தெலுங்கு மொழிமாற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதை முடித்துவிட்டுதான் ‘லூசிஃபர்’ தெலுங்கு மொழிமாற்றில் நடிக்கவிருக்கிறாராம் சிரஞ்சீவி.

இந்நிலையில், ‘லூசிஃபர்’ தெலுங்கு மொழிமாற்றை இயக்க தெலுங்கு இயக்குநர்களை விட தமிழ் இயக்குநரை வைத்து எடுத்தால் தமிழகத்திலும் ஒரு வசூலைப் பார்க்கலாம் என்பது அவர்களது திட்டம்.

இதனால், இயக்குநர் கே.வி.ஆனந்தை அணுகியிருக்கிறார்கள். அவர் தமிழிலேயே ஒரு பெரிய நடிகருக்காகக் கதை திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் இந்தப்படத்தை இயக்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

எனவே,இயக்குநர் மோகன் ராஜாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அவரும் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டாராம்.விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Posts