சினிமா செய்திகள்

விஜய் 68 படம் இந்த ஆங்கிலப்படத்தின் நகல்?

அக்டோபர் 2,2023 அன்று பூஜையுடன் தொடங்கியது விஜய்யின் 68 ஆவது படம்.வெங்கட்பிரபு இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன்,பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ்,மோகன் உள்ளிட்ட பல நடிகர்களும் மீனாட்சிசெளத்ரி, சினேகா,லைலா உள்ளிட்ட பல நடிகைகளும் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு,யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். வெந்துதணிந்ததுகாடு படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த்தாநுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு சென்னை, தென்னாப்பிரிக்கா ஆகியனவற்றைத் தொடர்ந்து ஐதராபாத்தில் நடந்துவருகிறது.

இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அப்பா, மகன் என இரண்டுவேடங்களில் விஜய் நடிக்கிறார்.ஒருவர் தீவிரவாதி, இன்னொருவர் காவலதிகாரி என்றும் சொல்கிறார்கள்.

வெங்கட்பிரபு இயக்கும் படங்கள், ஏதாவதொன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆங்கிலப்படங்களைத் தழுவியோ
அல்லது அதை அப்படியேவோ எடுக்கப்படுகின்றன. இதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார்.

இதற்கு முன் அவர் இயக்கிய மாநாடு படம் எந்தெந்தப் படங்களிலிருந்து எடுக்கப்பட்டது என்று அந்தப்படத்திலேயே சொல்லியிருப்பார்கள்.

விஜய் 68 படமும் விதிவிலக்கல்ல.

இந்தப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினிமேன் என்கிற படத்தைத் தழுவி எடுக்கப்படுகிறதாம். வில்ஸ்மித் நாயகனாக நடித்த அந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம்.

அந்தப்படத்தை அப்படியே எடுக்கிறார்களா என்றால்? இல்லை. பெரும்பகுதிப்படம் அதை நினைவுபடுத்துகிற மாதிரியே இருக்கும். க்ளைமாக்ஸ் உள்ளிட்ட சில முக்கியப் பகுதிகள் வேறொரு படத்திலிருந்து எடுக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அது எந்தப்படம்? என்பது படப்பிடிப்பு நடக்கும்போது தெரிந்துவிடும்.

பிகில் படத்தில் அப்பா மகனாக நடித்திருந்தார் விஜய். இப்போதும் அப்படியா? என்று யாரும் வருத்தப்படாத வண்ணம் இந்தப்படத்தின் மையக்கதை இருக்கிறது. அதற்கான காட்சிகளும் ஜெமினிமேன் படத்திலிருந்து எடுக்கப்படுவதால் மிக சுவாரசியமாகப் படம் போகும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

எங்கிருந்து எடுத்தால் என்ன? படம் நன்றாக இருந்தால் போதும் என்பது இரசிகர்களின் எதிர்பார்ப்பு. காப்பியடித்த கதை என்று வழக்கு வராமல் இருக்கவேண்டும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் நினைப்பு.

எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் படம் நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனம் அல்லது வசூலில் கொடிகட்டிப் பறக்கிறது என்கிற நிலை இருந்தால் போதும் என்று எண்ணும் இயக்குநர்.

இப்படியாக நடந்துகொண்டிருக்கிறது விஜய் 68 படம்.

Related Posts