சந்திரமுகி 2 வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அந்தப்படம் வெளியானது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத் தற்போது தயாராகியிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாகத் தயாராகி இருக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவருடன், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜி.கே. எம்.தமிழ்க்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.











