சிக்கல் தீர்ந்தது அருள்நிதி படம் மீண்டும் தொடக்கம் – படப்பெயரும் கசிந்தது
ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார் அருள்நிதி. அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன் வேடம் அவருக்கு. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் மற்ற படங்களைப் பின்னுக்குத் தள்ளிவைத்துவிட்டு மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு படப்பிடிப்புக்குத் தயாரானார்.
அந்தப்படத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது நாட்கள் வரை ஒரேகட்டமாக முடித்துவிடத் திட்டமிட்டு ஜூன் மாத மத்தியில் பரமக்குடி போனார்கள்.
ஆனால், அங்கு நடந்த பல சிக்கல்கள் காரணமாக ஆறு நாட்களிலேயே சென்னை திரும்பிவிட்டார் அருள்நிதி.
அதன்பின், அங்கு ஏற்பட்ட சிக்கல்கள் பற்றிப் பேசி அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் நாளைமுதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
இதற்காகப் படக்குழுவினர் சென்னையிலிருது புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒரேகட்டமாக மொத்தப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத்தான் சென்னை திரும்புவார்களாம்.
அப்புறம் இன்னொரு கூடுதல் தகவல், இப்படத்துக்கு மூர்க்கன் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.











