சசிகுமாருக்குப் பதில் அமீர் – அருள்நிதி பட தகவல்

டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு,தேன் ஆகிய படங்களின் இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவற்றோடு இப்போது இன்னொரு புதிய படத்திலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அப்புதிய படத்தை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் நான்கு நாட்கள் நடைபெற்றிருந்தது.
அதன்பின் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறார்கள். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. ஒரேகட்டப் படப்பிடிப்பில் மொத்தப்படத்தையும் முடித்துவிடுவது என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க சசிகுமாரிடம் பேசியிருந்தார்களாம். அவரும் கதாநாயகன், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியனவற்றிற்காக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாராம்.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு கதையைக் கேட்டிருக்கிறார்.இயக்குநர் போய் கதை சொன்னவுடன், இதேபோல் இன்னொரு படத்திலும் நடித்திருக்கிறேன் அதனால் இதில் நடிக்கவில்லை என்று சொல்லி படத்திலிருந்து விலகிக் கொண்டாராம்.
இதனால் திடுக்கிட்டுப்போன படக்குழு அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைக்க முயன்றதாம்.ஆனால் அவர் உறுதியாக நடிக்கவியலாது என்று மறுத்துவிட்டாராம்.
அதன்பின் இயக்குநர் அமீரிடம் இந்தக் கதையைச் சொல்லி அந்த முக்கிய வேடத்தில் அவர் நடிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்கள்.அவரும் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம்.
நாளை தொடங்கவிருக்கும் படப்பிடிப்பின் தொடர்ச்சியில் அவரும் பங்கு பெறுகிறார் என்று சொல்கிறார்கள்.
சசிகுமார் நடிக்க மறுத்ததற்குக் காரணம் கதையும் அவருடைய கதாபாத்திரமும்தான் என்று வெளியில் சொல்லப்பட்டாலும் அவர் கேட்ட சம்பளம் அதிகமாக இருப்பதாக தயாரிப்புநிறுவனம் எண்ணியதும் அவ்வளவு சம்பளம் தரவியலாது என்று மறுத்ததும்தான் உண்மையான காரணம் என்று சொல்லப்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.