October 17, 2026
சினிமா செய்திகள்

ஸ்ரீதேவி மாதிரி இருக்கிறீர்கள் எனச் சொல்கிறார்கள் – சுபிக்‌ஷா பரவச பேட்டி

அண்மையில் வெளியான வேட்டைநாய் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுபிக்‌ஷா. ராணி எனும் அவருடைய வேடத்துக்கு நல்ல வரவேற்பு.அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரிடம் ஒரு பேட்டி…

1. இந்தப்படத்தை ஒப்புக்கொண்டது எப்படி?

படத்துக்குப் படம் என்னுடைய வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். இந்தப்படத்தின் இயக்குநர் கதை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. பள்ளி மாணவி வேடம் அதன்பின் மனைவி அதற்கடுத்து கர்ப்பிணி எனப்பல மாற்றங்கள் கொண்ட வேடம். நடிக்க வாய்ப்புள்ள வேடம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்.

2.படப்பிடிப்பு அனுபங்கள்…?

மாணவி வேடத்துக்காக ஆறு கிலோ வரை எடை குறைத்தேன்.அந்தக்காட்சிகள் படமாக்கப்பட்ட பின்பு, மீண்டும் எடை கூட்டி திருமணத்துக்குப் பின்பான காட்சிகளில் நடித்தேன். படத்தில் இந்த வேறுபாடு தெரிகிறது, சரியாக அமைந்திருக்கிறது என்று பலர் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது.

3. பட வெளீயீட்டுக்குப் பின் கிடைக்கும் வரவேற்புகள் எப்படி?

கதாநாயகியாக வந்தோம் போனோம் என்றில்லாமல் படத்துக்கு உங்கள் வேடம் பெரிய பலமாக இருக்கிறது. ஸ்ரீதேவி போல இருக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவ்வளவு பெரிய லெஜண்ட்டுடன் என்னை ஒப்பிடுவது அளவு கடந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

subiksha 1

subiksha 1

4.அடுத்து நடிக்கும் படங்கள்..?

பாலாஜிசக்திவேல் சார் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். அதில் எனக்கு டாக்டர் வேடம். வேட்டைநாய் ராணி கேரக்டருக்கு நேர் மாறான வேடம்.
அதற்கடுத்து மாறன் இயக்கத்தில் உதயநிதி சார் நடிக்கும் கண்ணை நம்பாதே படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்.

5. அன்னக்கொடியில் அறிமுகமானீர்கள், நிறையப் படங்களில் நடிக்கவில்லையே?

அன்னக்கொடி முடிந்ததும் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடிக்கப்போனேன். அதனால் தமிழில் இடைவெளி வந்தது.அதுமட்டுமின்றி நான் முன்பே சொன்னதுபோல் வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். வருகிற எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை.
 
6. அப்படிச் செய்தால் பல வாய்ப்புகளை இழக்க வேண்டியிருந்திருக்குமே?

உண்மைதான், நல்ல கேரக்டர் இல்லை என்பதால் பல படங்களை நிராகரித்திருக்கிறேன். 

7. மாஸ் ஹீரோயின் ஆக வேண்டுமெனில் எல்லாவித வேடங்களிலும் நடிக்க வேண்டுமென்பார்களே?

சரிதான், அதற்காக இந்தப்படத்தில் இவரும் இருக்கிறார் என்று சொல்கிற மாதிரி வேடங்களில் நடிக்க மனமில்லை. இப்போது எனக்குக் கிடைத்திருக்கிற அடையாளம் நிறைய வாய்ப்புகள் தரும் என்று நம்புகிறேன்.

8. உங்கள் குடும்பம் பற்றி..?

அப்பா அம்மா அண்ணன் ஆகியோரைக் கொண்டது என் குடும்பம். எல்லோருக்கும் என் திரையுலகப் பயணத்துக்குப் பக்க பலமாக இருக்கிறார்கள்.  

– சரவணன்

Related Posts