கமல் வெளியிட்ட யசோதா – உருவாக்கும் விளைவுகள்
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர்.
இயக்குநர் கெளதம்மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.அதன் டீசர் அண்மையில் வெளியானது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஒரு குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில்,நடிகை ஸ்ரீபிரியாவும் கமீலா நாசரும் இணைந்து கைபேசியிலேயே உருவாக்கியிருக்கும் யசோதா எனும் குறும்படத்தின் முதல்பார்வை இடம்பெற்றிருக்கிறது.
அக்குறும்படத்தில் சிவாஜிபேரன் சிவக்குமார் மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்களாம். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்துக்கு க்ரிஷ் பின்னணி இசை சேர்த்திருக்கிறார். நித்யாபிள்ளை பாடல் பாடியிருக்கிறார்.
கமல் வெளியிட்டதால் இக்குறும்படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறதென ரசிகர்கள் கூறுகிறார்கள்.
கமல் போன்ற புதுமைகளின் முன்னோடியின் ஆதரவு மற்றும் இளையோர்களின் எண்ணத்துடிப்பை வெளிப்படுத்தும் கெளதம்மேனன் போன்றோரின் செயலால் கைபேசி மூலம் உருவாகியிருக்கும் இக்குறும்படங்கள் சிறப்பாக அமையும் என்பதால் இனி கைபேசியிலேயே முழுநீளப்படமெடுக்கும் முயற்சிகள் நடக்கலாம்.











