லைகா தமிழ்க்குமரன் அர்ச்சனாகல்பாத்தி போட்டி – சூடுபிடிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால், தேர்தல் தாமதமாகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக அணிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது.
அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோர். பொருளாளராக சந்திரபிரகாஷ்ஜெயின் போட்டியிடவிருக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு ஒய்நாட் சசியை நிற்கவைக்கப் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இன்னொரு பக்கம், இப்போது செயலாளராக இருக்கும் மன்னன் தலைமையில் ஓர் அணி உருவாகிறதாம். இன்னும் முழுமை பெறாத அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் செயலாளர்களாக ஜேஎஸ்கே சதீஷ் மற்றும் தேனப்பன் ஆகியோர் போட்டியிடவிருக்கிறார்களாம். துணைத்தலைவர்களாக சிங்காரவேலன், விடியல்ராஜு ஆகியோர் போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த அணியில் கலைப்புலிதாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரில் ஒருவரைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்படி கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அவர்கள் இருவருமே அதை நிராகரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இனிவரும் நாட்களில் இவற்றில் மாற்றங்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அணிகள் உறுதியாகும் என்கிறார்கள்.











