கல்தா – திரைப்பட விமர்சனம்
இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போகிறார்கள்.
இதனால் அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது.
அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத் தொடர்ச்சி மலை நாயகன் ஆண்டனி ஆகியோர் முன்னணிப் போர்வீரர்களாக வருகின்றனர்.
ஆண்டனிக்கு இந்தவேடம் நன்றாகப் பொருந்தியிருக்கிறது. கோபம், வேகம், மனைவியுடனான காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.
சிவநிஷாந்த், முழுமையான கதாநாயகனாகும் தகுதி உள்ளவர் என்பதை இந்தப்படத்தில் காட்டியிருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். ஆக்ரோசமாகச் சண்டை போடுகிறார். நடிப்பில் முன்னேற்றம் தேவை.
ஆண்டனி ஜோடியாக வரும் திவ்யா,சிவநிஷாந்த் ஜோடியாக நடித்திருக்கும் அய்ரா ஆகிய இருவருமே தங்கள் வேடங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
சிவநிஷாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ் கவனிக்க வைத்திருக்கிறார். ஊர்ப் பிரச்சினையில் காட்டும் அக்கறை மகன் மீதான பாசம் ஆகியனவற்றில் கிராமத்து அப்பாக்களை பிரதியெடுத்திருக்கிறார். மகன் மதுக்குடித்துவிட்டு வருகிற நேரத்தில் அவருடைய நடிப்பும் வசனமும் நன்று.
அப்புக்குட்டி, ராஜசிம்மன்,காக்காமுட்டை சசி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். கடைசியில் காக்காமுட்டை சசி செய்யும் செயல் அதிர்ச்சியூட்டுகிறது.
ஜெய்கிரிஷின் இசையில் பாடல்கள் தாழ்வில்லை. பின்னணி இசை தேவையான அளவு இருக்கிறது.
பி.வாசுவின் ஒளிப்பதிவு அளவாக இருக்கிறது. எதார்த்தம் என்ற பெயரில் குப்பைக்கூளங்களை அளவுக்கதிகமாகக் காட்டாமல் தவிர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.ஹரிஉத்ரா, நல்ல கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். திரைக்கதை அமைப்பில் குறைகள் இருக்கின்றன.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மட்டுமில்லாமல் சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லி அதன் மூலம் அரசியல் பழகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.











