தள்ளிப் போனது சந்தானம் படம்
சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இருதிரைப்படங்கள் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
டகால்டி படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சந்தானம் மற்றும் எஸ்.பி.செளத்ரி இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் தயாராகி பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
ஒரேநாளில் சந்தானத்தின் இரண்டு படங்கள் வெளியானால் இரண்டு படங்களுக்குமே பாதிப்பு ஏற்படும் என்று பலர் சொல்லியும் இரு படக் குழுவினரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
திரைமறைவில் பல வேலைகள் நடந்ததைத் தொடர்ந்து இப்போது சர்வர் சுந்தரம் படம் இரண்டு வாரங்கள் தள்ளிப்போயிருக்கிறது.











