சினிமா செய்திகள்

சந்தானம் சூரி படங்கள் ஒரேநாளில் வெளியீடு – அம்பலத்துக்கு வந்த அதிர்ச்சித் தகவல்

டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம்,கீதிகா திவாரி,செல்வராகவன்,கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,மாறன், கஸ்தூரி,ரெடின் கிங்ஸ்லி,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

அதேநாளில் வெளியாகும் இன்னொரு படம் மாமன். விமல் நடித்த விலங்கு இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தின் கதையும் சூரியுடையதே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படமும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இவ்விரு படங்களும் ஒரேநாளில் வெளியாகின்றன.அதனால், திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வதில் கடும்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவற்றில் சந்தானம் படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் பெயர் போடாமல் வெளியிடுகிறது.சூரி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை கோவையைச் சேர்ந்த சிதம்பரம் பெற்றுள்ளார்.

இதனால் சந்தானம் படத்துக்கு அதிக திரையரங்குகளும் சூரி படத்துக்குக் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டது.

இதனால், சூரி படத்தின் உரிமையைப் பெற்ற விநியோகஸ்தர் சிதம்பரமும், இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினரிடமே கொடுத்துவிட்டாராம்.

அதனால் இரண்டு படங்களின் திரையரங்க ஒப்பந்தமும் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினர் மூலமே நடக்கிறது என்கிறார்கள்.அதனால் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்கு ஒதுக்கீடுகள் அமைந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம், ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்குப் படம் கொடுத்தால்தான் சரியான அளவில் திரையரங்குகள் கிடைக்கும் என்கிற நிலையை இந்நிகழ்வு அம்பலப்படுத்தியிருப்பதாகவும் இது திரையுலகுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Related Posts