சினிமா செய்திகள்

மணிரத்னம் கமல் படத்திலிருந்து விலகினார் சிம்பு – காரணம் என்ன?

சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுதவிர, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவற்றிற்கிடையே, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கமல் 234 படத்தில் சிம்பு முக்கியவேடமொன்றில் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.இந்தப்படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப்படக்குழுவினர் இந்தச் செய்தியை அறிவிக்கவும் இல்லை, வந்த செய்தியை மறுக்கவும் இல்லை. எனவே அது உறுதிதான் என்று நம்பப்பட்டது.

இப்போது நிலைமை மாறிவிட்டது.

அந்தப்படத்தில் நடிக்கவியலாது என்று சிம்பு சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அதை அப்படக்குழுவினரும் ஏற்றுக்கொண்டார்களாம்.

இரண்டு படங்களையும் தயாரிப்பது ஒரே நிறுவனம் எனும்போது ஒருபடத்தில் அவர் நடிக்க மறுத்தால் இன்னொரு படத்துக்கும் சிக்கல் வருமே என்று நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை.

அதற்குக் காரணம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் பல்வேறு தோற்றங்களில் அதாவது கெட்டப்களில் நடிக்கவிருக்கிறாராம் சிம்பு.

அதற்கேற்றபடி அவர் தயாராகும் நேரத்திலேயே கமல் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிடப்படுகிறதாம். எனவே சிம்பு அதில் நடிக்கவியலாத நிலை.

இரண்டு படங்களையும் ஒரே நிறுவனம் தயாரிப்பதால் இந்த எதார்த்த நிலை அவர்களுக்கு எளிதாகப் புரிந்துவிட்டது. மணிரத்னம் படத்தில் சிம்பு இருப்பதைவிட தேசிங்குபெரியசாமி படத்தில் நடிப்பதுதான் தயாரிப்பு நிறுவனத்துக்கு முக்கியம். எனவே, மணிரத்னம் படத்திலிருந்து சிம்பு விலகும் முடிவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்துவிட்டனர்.

அவரும் தேசிங்கு பெரியசாமி படத்துக்காகத் தயாராகிவருகிறார்.

அதேநேரம்,மணிரத்னம் இயக்கும் கமல் 234 படத்தில் சிம்புவுக்குப் பதிலாக நடிக்க வேறொரு நடிகரைத் தேடும் படலம் நடந்துகொண்டிருக்கிறதாம்.

Related Posts