சினிமா செய்திகள்

சித்தப்பா மூலம் காய் நகர்த்தல் – விஜய் மகன் இயக்குநரான கதை

ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத்தொழில்நுட்பங்கள் தொடர்பான படிப்புகளை படித்து வந்தார். பிறகு ஆங்கிலத்தில் குறும்படங்களையும் இயக்கினார்.

2009 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார் ஜேசன் சஞ்சய். அதனால் அவர் நடிகராக வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சிறு வயது முதலே இயக்குநராகும் ஆசை இருந்துள்ளது. அவர் வளர்ந்ததும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அவற்றையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார். தனது விருப்பப்படி இயக்குநர் ஆகியிருக்கிறார் ஜேசன்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை கதை, திரைக்கதை எழுதி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான தகவலை ஆகஸ்ட் 28 அன்று அறிவித்தார்கள்.

அது குறித்து ஜேசன் கூறும்போது, ‘இயக்குநராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது’ என்றார்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ‘விஜய்யின் மகனை அறிமுகப்படுத்துவது சந்தோசமாக உள்ளது. அவர் சொன்ன கதை எங்களுக்குப் பிடித்திருந்தது’ என்றார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் இது எப்படி நடந்தது? என்பது குறித்து பல்வேறு கதைகள் உலாவரத் தொடங்கிவிட்டன.

Sanjeev - Tamilkumaran - jason sanjay

Sanjeev – Tamilkumaran – jason sanjay

உண்மையில் நடந்தது என்ன?

விஜய்யின் சித்திமகன் சஞ்சீவ் (நடிகர் விக்ராந்த்தின் அண்ணன்) ஓர் இயக்குநர். இவர் இயக்கிய தாக்க தாக்க எனும் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது.

அதன்பின் அடுத்த படத்தை இயக்குவதற்காக லைகா நிறுவனப் பொறுப்பாளர் தமிழ்க்குமரனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.

சித்தப்பா முறைகொண்ட அந்த சஞ்சீவிடம் திரைப்படத்துக்காக தான் உருவாக்கிய கதையைச் சொல்லியிருக்கிறார் ஜேசன் சஞ்சய்.

அதுகுறித்து தமிழ்க்குமரனிடம் சொல்லியிருக்கிறார் சஞ்சீவ். அதைத்தொடர்ந்து ஜேசன் சஞ்சய்யை அழைத்து அந்தக் கதையைக் கேட்டிருக்கிறார் தமிழ்க்குமரன். அவருக்குக் கதை பிடித்திருந்ததாம். அதன்பின் சுபாஸ்கரனிடம் கதை சொன்னாராம் ஜேசன் சஞ்சய்.அவருக்கும் கதை பிடித்துவிட்டது.

சென்னை வரும்போது முறையான ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று சுபாஸ்கரன் சொல்லியிருந்தாராம். அதன்படி சந்திரமுகி 2 நிகழ்ச்சிக்காக சென்னை வந்த சுபாஸ்கரன், ஜேசன் சஞ்சய்யை அழைத்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

நடிகர் விஜய்க்குத் தெரியாமலே இந்நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமான செய்தி.

Related Posts