சினிமா செய்திகள்

உதயநிதி முயற்சியால் நடந்த நன்மை – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

தமிழ்த்திரையுலகில் க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் விபிஎஃப் எனப்படும் ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாகப் பெரும் சர்ச்சை உள்ளது.

இக்கட்டணத்தை நாங்கள் செலுத்தமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டுவருகிறது.

திரையரங்குக்காரர்களோ, நீங்கள் பணம் கட்டி வெளியிட்டால் நாங்கள் திரையிடுகிறோம் இல்லையென்றால் சும்மா இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

முடிவில்லாமல் தொடரும் இந்தச் சர்ச்சையின் அடுத்த கட்டமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களும் இணைந்து ஒரு முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதன்படி, விபிஎஃப் கட்டணம் கட்டமாட்டோம் என்கிற கோரிக்கையை முன்வைத்து  2022 சனவரி 1 முதல் புதிய திரைப்படங்களைத் திரையிடமாட்டோம் என்கிற முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

இதனால், தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் சிக்கும் என்று திரையுலகினர் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழகத்தை கொரோனா பிடியிலிருந்து காப்பாற்றிட இரவுபகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு தலைமையில் திரை உலகத்தை மீட்டெடுத்திட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களிடம் வி.பி.எப். கட்டணம் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.  இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திடவும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குநர் முனைவர் வி.ப.ஜெயசீலன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சனவரி 1 முதல் வேலைநிறுத்தம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தால் சிக்கல் பெரிதாகும் என்கிற நிலையில் உதயநிதியின் முயற்சியால் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.
சந்திப்பின்போது, அரசு அதிகாரிகள் மூலம் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேசுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அரசாங்கம் இதில் தலையிடுவதால் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்கள் 2022 சனவரி 1 முதல் விபிஎஃப் கட்டணத்தைப் பெருமளவில் குறைத்துக் கொள்ளும் என்றும் இதனால் தயாரிப்பாளர்கள் நிம்மதி அடைவார்கள் என்றும் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
நல்லது. நடக்கட்டும்.

Related Posts