சினிமா செய்திகள்

பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் மறைவு – முதல்வர் இரங்கல்

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணிக்க விநாயகம்,1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியவர். கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் கண்ணுக்குல கெழுத்தி…. என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார்.

தொடர்ந்து ஏலே இமயமலை… (தவசி), தேரடி வீதியில தேவதை வந்தா… (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே… (உன்னை நினைத்து), விடை கொடு எங்கள் நாடே…. (கன்னத்தில் முத்தமிட்டால்), கொடுவா மீச அறுவா பார்வை…. (தூள்), சின்ன வீடா வரட்டுமா… (ஒற்றன்), கொக்கு பற பற… (சந்திரமுகி), கட்டு கட்டு கீரை கட்டு… (திருப்பாச்சி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களைப் பாடி உள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவர், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

திருடா திருடி திரைப்படத்தில் நடிகர் தனுஷின் தந்தை கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தில், யுத்தம் செய், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் மாணிக்க விநாயகம் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமது இரங்கல் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Posts