தனுஷ் கோரிக்கை நிராகரிப்பு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகளும் நிறைவடைந்து வெளீயீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே இந்தப் படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகப்போவதாக அவ்வப்போது செய்தி வரும். அதைப் படக்குழுவினர் மறுத்துவந்தனர்.
ஆனால் இப்போது நேரடியாக இணையத்தில் படம் வெளியாவது உறுதியாகிவிட்டதாகச் சொல்லப்பட்டது.
அச்செய்தி வெளியானதும் தனுஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இவ்வாறு தனுஷ் தெரிவித்திருந்தார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி தனுஷ் இவ்வாறு சொல்லியிருந்தார்.
அதன்பின், தனுஷ் ரசிகர்களும் இதை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஓட்டுவது போன்ற வேலைகளைச் செய்துவந்தனர்.
ஆனால்,நேற்று நடந்த நிகழ்வு, ஜகமே தந்திரம் படம் நேரடியாக இணையத்தில்தான் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
ஜகமே தந்திரம் படத்தை ரிலையன்ஸ் மற்றும் ஒய்நாட் நிறுவனங்கள் தயாரித்திருந்தன. அதே நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ஏலே படம் இன்று ( பிப்ரவரி 12) திரையரங்குகளில் வெளீயாவதாக இருந்தது.
ஆனால், ஒரு படம் வெளியாகும் போதே, சிறிய படங்கள் 30 நாட்கள் வரையும் பெரிய படங்கள் 50 நாட்கள் வரையிலும் இணையத்துக்குக் கொடுக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிக் கடிதம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால்தான் படங்கள் திரையிடப்படும் என்றும் திரையரங்கினர் அறிவித்தனர்.ஏலே படத்துக்கும் அப்படி ஒரு கடிதம் கொடுத்தால்தான் படத்தைத் திரையிடுவோம் என்று சொல்லிவிட்டனர்.
அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன ஒய்நாட் நிறுவனம், அதனால் ஏலே படத்தை பிப்ரவரி 28 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருப்பதாக அறிவித்துவிட்டது.
இந்நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ஜகமே தந்திரம் படத்தை நேரடியாக இணையத்தில் வெளீயிடுவதை மாற்றி திரையரங்கில் வெளீயிட்ட 15 நாட்களில் இணையத்தில் வெளியிட ஒப்பந்தம் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் திரையரங்கினர் கேட்கும் உறுதிமொழிக் கடிதம் கொடுக்கவியலாத நிலை ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
இதனால் தனுஷ் கோரிக்கையை மீறி ஜகமே தந்திரம் படம் இணையத்தில்தான் வெளியாகும் என்கிறார்கள்.











