தர்பார் படம் மீது வழக்கு – கமல் கருத்து
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மரியமிக்கேல் என்பவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தர்பார் படத்தில் சீருடைப் பணியாளர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாகவும், சீருடையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் ‘ஹிப்பி’ தலை, தாடியுடன் ரஜினிகாந்த் வருகிறார்.
படத்தில் போலீஸ் கமிஷனராக ரஜினி பேசும் வசனத்தில், நான் கமிஷனர் அல்ல, ரவுடி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த போலீஸ், இராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
இது வருங்கால இளைய சமுதாயத்துக்கு போலீஸ் மீது உள்ள நல்லெண்ணத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளது. ஆகையால் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய 3 பேர் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு மீதான விசாரணை வருகிற 21 ஆம் தேதி நடக்கிறது.
இப்படத்தில் ஒரு காட்சியில், ‘பணம் இருந்தால் கைதியும் ஷாப்பிங் போகலாம்; தென்னிந்தியாவில் கூட ஒரு கைதி இப்படி அப்பப்போ வெளியே போய்ட்டு வருவாங்களாமே!?’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
இந்த வசனம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவைக் குறிப்பிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இதைக் கண்டித்துள்ளார். இக்காட்சியை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என படக்குழுவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், “ரஜினிகாந்தும், அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இப்படி ஒரு வசனத்தை வைக்க அனுமதித்திருக்கக் கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவார்கள் என நம்புகிறோம். இல்லையேல், அவர்கள் மீதும் சட்டப்படி வழக்குத் தொடரப்படும்” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார் ராஜா செந்தூர் பாண்டியன்.
இது தொடர் விவாதமாகி வந்த நிலையில், ‘தர்பார்’ படக்குழுவினர் அந்த வசனத்தைப் படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “எங்களின் ‘தர்பார்’ திரைப்படத்தில், கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ, அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதைப் புண்படுத்துவதாகத் தெரிய வந்ததால், அதைப் படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது லைகா நிறுவனம்.
இதுகுறித்து, திருச்சி திருவெறும்பூரில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
பராசக்தி காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாதது வருத்தமளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.











