இணையதளங்களில் தர்பார் – அதிரும் படக்குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (சனவரி 9, வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது.
இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பலர் தர்பார் படத்தை தரவிறக்கம் செய்யும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
பொதுவாக, ஒரு படம் வெளியாகி அன்றைய இரவு இணைய தளங்களில் வெளியாகும். ஆனால், தர்பார் விஷயத்தில் 14 மணிநேரத்திற்குள்ளாகவே திரைப்படம் வெளியானது தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கோடிக்கணக்கான பணம்,நூற்றுக்கணக்கானோரின் பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி அல்லது சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.
இப்படத்தைத் தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்துக்கும் பைரஸி இணையதளங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அந்நிறுவனம் தயாரித்த படமே இணையதளங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.











