September 22, 2026
Uncategorized

தர்பார் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள். 


அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த்.


அவர் மும்பை வந்ததும் தொடங்குகிற அதிரடி அட்டகாசங்கள் படம் முடியும்வரை தொடருகின்றன.


காவல்துறை அரசாங்கத்தின் ஓர் அங்கம் என்பதையெல்லாம் மறந்துவிட்டுப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், ரஜினியின் அதிரடிகள், நடை உடை பாவனை, இந்த வயதிலும் சுறுசுறுப்பாகச் சண்டை போடும் அழகு ஆகியனவற்றை ரசிக்கலாம்.


கதை திரைக்கதைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட ரஜினியை இளமையாகக் காட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம். அதில் வெற்றி பெற்று ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.


சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டும் அவர் நயன்தாராவைப் பார்த்ததும் உளறுவது பழசென்றாலும் ரசிக்க வைக்கிறது. 


ஸ்ரீமன் வந்து பேசிவிட்டுப் போன பின்பு, மகளிடம் ரஜினியின் நடிப்பு அனுபவ மிளிர்வு.


ஒரே அடிதடி இரத்தம் ஆகியனவற்றால் உறைந்திருக்கும்ப்போது அழகுப்பதுமையாக திரைக்கதைக்குள் வருகிறார் நயன்தாரா அப்படியே அவர் வருகிற வரை இருக்கிறார்.


ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதாதாமஸ் நன்று. அப்பாவுக்குப் பெண் பார்க்கிறார் என்பது ஒட்டாமல் இருந்தாலும் நடிப்பால் அக்குறை தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். மருத்துவமனைக் காட்சியில் கலங்க வைக்கிறார்.


யோகிபாபு வருகிற காட்சிகள் எல்லாம் சிரிப்பு மழை. அவருக்கு இன்னும் காட்சிகள் வைத்திருக்கலாம்.


சுனில்ஷெட்டி,நவாப்ஷா,பிரட்டிக்பாப்பர் உட்பட படத்தில் பல வில்லன்கள்.   


சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு ரஜினிக்குப் பலம். 


அனிருத்தின் இசையில் ச்சும்மா கிழி பாடல் படம் நெடுக ஒலிக்கிறது. பின்னணி இசையில் வசனங்களையும் சேர்த்திருக்கிறார்.


ரஜினிக்கு முக்கியத்துவம் என்று முடிவெடுத்துவிட்ட இயக்குநர் முருகதாஸ் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார். காவல்துறைக்கு வானளவிய அதிகாரம் வேண்டும் என்கிற சனநாயகத்துக்கு எதிரான அவருடைய விருப்பம் திரைக்கதையில் எதிரொலிக்கிறது.

காட்சிகள் மட்டுமின்றி கருத்தளவிலும் அக்மார்க் ரஜினி படம்.

Related Posts