விமர்சனம்

தொட்டுவிடும்தூரம் – விமர்சனம்

ஓர் அழகான காதல் அருமையான சமுதாயக் கருத்து மனம் வலிக்கும் முடிவு ஆகிய அமசங்களைக் கொண்டு வந்திருக்கும் படம் தொட்டுவிடும்தூரம்.


நாயகன் விவேக்ராஜ், துடிப்பான கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். காதல் பாசம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றை விட சண்டைக் காட்சிகளில் தேர்ந்த நாயகர்கள் அளவுக்கு சண்டை செய்திருக்கிறார். 


நாயகி மோனிகா சின்னகொட்லா. அழகிய புதுவரவு. இயல்பாக நடித்திருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமாக நடித்துக் கவனம் ஈர்க்கிறார். 


நாயகனின் அம்மாவாக சீதா. நாயகனின் நண்பராக பாலசரவணன்,வில்லனாக நடித்திருக்கும் ராஜசிம்மன் உள்ளிட்டோர் கொடுத்த வேடங்களுக்கு நியாயமாக நடந்திருக்கிறார்கள்.


சிங்கம்புலி குழுவின் நகைச்சுவை கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ஓகே.


நோவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.


கே.ராம்குமாரின் ஒளிப்பதிவில் நாகர்கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகள் பசுமையாக மனதில் பதிகின்றன. 


இளங்கோ வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. 


இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு இது முதல்படம் என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவு நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். 


தொட்டுவிடும்தூரத்தில் இருக்கும் நாயகன் நாயகியும் இணைந்துவிட வேண்டும் என்று பார்வையாளர்கள் பதட்டப்படுகிறார்கள். 


முடிவு மாறியிருந்தால் இன்னொரு காதல் கோட்டை.

Related Posts