October 17, 2026
விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் – திரைப்பட விமர்சனம்

பள்ளிக்காலத்தில் காதல் எனும் பொருந்தாக் கதை என்றாலும் அதைப் பொருத்தமாகச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது மறக்குமா நெஞ்சம்.

பள்ளிப்படிப்பை முடித்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் எல்லோரும் பதட்டமாக நாயகன் ரக்சனுக்கு மட்டும் சந்தோசம். அது ஏன்? அதன்பின் என்னவானது? என்பதுதான் படம்.

சின்னச் சின்ன வேடம், நாயகனின் நண்பன் எனப்படிப்படியாக முன்னேறி இப்படத்தில் நாயகனாகியிருக்கிறார் ரக்சன். அவருக்கேற்ற கதை. அதனால் பள்ளி மாணவன், அதற்குப் பின்னான வாலிபன் ஆகிய இருவேறு தோற்றங்களிலும் மாற்றங்கள் காட்டி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மலினா, எளிய அழகு அளவான நடிப்பு ஆகியனவற்றால் இரசிகர்களை ஈர்க்கிறார்.

தீனா, ராகுல் ஆகியோரின் கதாபாத்திரங்கள் திரைக்கதை எளிதாகப் பயணிக்கவும் படத்தின் தன்மையை மாற்றிக் காட்டவும் பயன்பட்டிருக்கிறது. அப்பாத்திரங்களிக்கேற்ற நடிப்பைக் கொடுத்து தங்களைத் தக்க வைத்திருக்கிறார்கள்.

மாணவ, மாணவிகளாக நடித்திருக்கும் ஸ்வேதா, முத்தழகன், மெல்வின் டெனிஸ், அருண் குரியன், அஷிகா காதர், விஷ்வாத், நட்டாலியா உள்ளிட்டோரும் இயல்பாக நடித்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.

முனீஸ்காந்த்துக்கு வழக்க்த்திலிருந்து மாறுபட்ட கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அவர் பொருத்தமாக இருக்கிறார்.ஆசிரியையாக நடித்திருக்கும் அகிலாவும் கவனம் பெறுகிறார்.

சச்சின் வாரியரின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையும் சுகம்.

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப்பகுதிகளின் கொள்ளை அழகுகளைச் சுருட்டிக் கொண்டுவந்து திரையில் விரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிதுரைசாமி. கதை கதாபாத்திரங்களைத் தாண்டி காட்சிகள் நிலைக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் ராகோ.யோகேந்திரன்,பள்ளிப்பருவம் என்பதைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கலாம். இளம் உள்ளங்களின் அகவுணர்வுகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.கதாபாத்திரத் தேர்வு, அவர்களிடமிருந்து நடிப்பை வாங்கிய விதம் ஆகியனவற்றில் வெற்றி பெற்றிருக்கிறார்.

– தனா

Related Posts