Uncategorized சினிமா செய்திகள்

காதல் தேன் கலந்து நல்ல கருத்து சொல்லும் பச்சை விளக்கு – இயக்குநர் பெருமிதம்

1964 ஆம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான படம் பச்சை விளக்கு.55 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் புதிய தமிழ்ப்படமொன்று தயாராகியிருக்கிறது.

இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர்.

கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.இவர்களோடு மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘மெட்ராஸ்’ புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குனர் சிவசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்துள்ள டாக்டர் மாறனே இந்தப் படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

Dr.Maran Imman Annachi

Dr.Maran Imman Annachi

இந்தப்படம் குறித்து டாக்டர் மாறனிடம் கேட்டபோது, சாலை விதிகளை மீறிய பயணமும் பொதுவிதிகளை மீறிய காதலும் ஆபத்தானவை என்பதைச் சொல்வதுதான் இந்தப்படம் என்கிறார்.

சமூகத்தில் காதல் என்கிற பெயரில் பலியாகும் இளம்பெண்களுக்கு மட்டுமில்லாமல் சாலை விபத்துகளில் பலியாகும் சமூகத்துக்கும் இப்படம் பாடமாக இருக்கும் என்கிறார்.

சாலை பாதுகாப்பு சம்பந்தமான படம் என்பதால், நிறைய சாலைகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் படப்பிடிப்பு நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டால் சலித்துக் கொள்வர். ஆனால், இந்தப்படத்தின் கதையைக் கேட்ட காவல்துறையினர் இதைத்தான் நாங்கள் கத்திக் கத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம், உங்கள் படம் பார்த்தாவது மக்கள் திருந்தட்டும் என்று சொன்னதோடு படப்பிடிப்புக்கு முழு ஆதரவு கொடுத்தனர் என்கிறார் பெருமிதமாய்.

‘மண்ணுக்குள் வைரம்’, ‘வேதம் புதிது’, ‘கனம் கோட்டார் அவர்களே’, ‘காலையும் நீயே மாலையும் நீயே’, ‘மேளம் கொட்டு தாலிக்கட்டு’, ‘உழைத்து வாழ வேண்டும்’ உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ள, இசையமைப்பாளர் ‘வேதம் புதிது’ தேவேந்திரன், கடந்த பத்து ஆண்டுகளாக தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இப்போது ‘பச்சை விளக்கு’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.அவரது இசையில், பாடல்களை பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் எழுத, சிவசங்கர், சந்திரிக்கா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள்ளார்.

இப்படத்துக்கு எஸ்.வி.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘டேஞ்சர் மணி’ சண்டைப் பயிற்சி அளிக்க, கே.நடராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னை அருகே உள்ள பிரபலமான பல்கலைக் கழகத்திலும், திருப்போரூர், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி.மணிமேகலை தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என்கிறார் இயக்குநர் டாக்டர் மாறன்.

சிவாஜியின் பச்சைவிளக்கு படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல், ஓளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்கிற பாடல்.

முதன்முறை இயக்குநராகக் களமிறங்கும் இயக்குநர் மாறன், சமுதாயத்துக்கு நல்ல கருத்தைச் சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவருடைய நல்ல எண்ணத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

Related Posts