சினிமா செய்திகள்

பிக்பாஸ் தொடர்பாக தகாத வார்த்தைகள் – கொந்தளித்த சேரன்

மழை விட்டாலும் தூறல் விடாது என்பது போல பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பெருமளவில் விவாதமாக மாறியது. சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தார்கள்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, கவின் – லாஸ்லியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிவுரை கூறினார் சேரன். அந்தச் சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பாவும், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டாலும் கவின் – லாஸ்லியா காதல் விவகாரம் இன்னும் முடிவு பெறவில்லை. இருவருமே எங்கும் சந்தித்துக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் சேரன்தான் எனப் பலரும் அவரைத் திட்டி வந்தார்கள். இதனால் சர்ச்சை உண்டானது.

இந்தச் சிக்கல் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் சேரன் கூறியிருப்பதாவது….

கவின்- லாஸ்லியா ரசிகப் பெருமக்களுக்கு, உங்களுக்குப் பிடித்தவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் சரி, வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் எனக் கூறினேன். அது உங்களுக்குத் தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.

தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரிய ஆளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசிப் பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை. அவர் புறக்கணித்தார் என்பதே உண்மை.

நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன். கவின் – லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ, வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது.

இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரிகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம். நான் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துகள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.

இதற்கு மேலும் என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பின்தொடர (follow) வேண்டாம்.. மிக்க நன்றி

இவ்வாறு தெரிவித்துள்ளார் சேரன்.

Related Posts