சினிமா செய்திகள்

கோவையில் காப்பான் படத்துக்குக் கடும் போட்டி எதனால்?

சூர்யாவின் காப்பான் படத்தை கோவை பகுதியில் விநியோகம் செய்யக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.

கோவை பகுதியின் (மினிமம் கியாரண்டி அடிப்படையில்) விநியோக விலையாக 4 கோடி சொல்லப்பட்டிருக்கிறதாம்.
 
இந்தத் தொகைக்குப் படத்தை வாங்கி விநியோகிக்க கோவையின் இரண்டு பெரிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்பிரமணியமும் ராஜமன்னாரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
 
யார் விநியோக உரிமையைப் பெற இருக்கிறார்கள்? என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்.

ஆனால் போட்டிக்கு ஒரு வலுவான காரணம் இருப்பது பலருக்குத் தெரியாது என்கிறார்கள்.

என்ன காரணம்? 

காப்பான் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்த வாரம் செப்டம்பர் 27 அன்று சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படம் வெளியாகவிருக்கிறது.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் கோவை விநியோக உரிமையைப் பெற்றிருப்பவர் ராஜமன்னார். 

அவரே காப்பான் பட உரிமையையும் பெற்றுவிட்டால், படத்தின் ஓட்டத்திற்கேற்ப அடுத்த வாரம் திரையரங்குகளை மாற்றிக் கொள்ளலாம். 

திருப்பூர் சுப்பிரம்ணியம் காப்பான் உரிமையைப் பெற்றால் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகளை மாற்ற விடாமல் போகும் ஆபத்து இருக்கிறது. 

அப்படி நடந்தால் நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால், எப்படியாவது காப்பான் படத்தையும் வாங்கிவிட வேண்டும் என்று ராஜமன்னார் போட்டி போடுவதாகச் சொல்கிறார்கள்.

Related Posts