கதைத்திருட்டு – காப்பான் படக்குழு சொன்னபடி செய்யுமா ?
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார்.
இப்படத்தில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. வருகிற 20 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘காப்பான்’ படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 12) தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கே.வி.ஆனந்த். அவருடன் பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.
அப்போது பேசிய கே.வி.ஆனந்த், 2012 ஆம் ஆண்டே இந்தப் படத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர். கதைத் திருட்டு வழக்கு தொடர்ந்த ஜான் சார்லஸ் என்னைச் சந்தித்ததாகச் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை. இந்தப் படம் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி பற்றியதே தவிர, நதிநீர் பங்கீட்டுக்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய பட்டுக்கோட்டை பிரபாகர், கதைத் திருட்டு தொடர்பான புகார்கள், எப்போதுமே பெரிய படங்களுக்கு மட்டுமே வருகின்றன. இதிலிருந்தே அந்தப் புகார்கள் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிகிறது. எங்கள் மீது கதைத் திருட்டு குற்றம் சாட்டிய ஜான் சார்லஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.
பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்தக் கருத்துக்கு, சொன்னபடி அவதூறு வழக்கு தொடர்ந்தால்தான் நாடு உங்களை நம்பும் என்கிற எதிர்க்கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. செய்வார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.











