சினிமா செய்திகள்

களவாணி 2 படத்துக்குத் தடை – சற்குணம் குற்றச்சாட்டும் சிங்காரவேலனின் விளக்கமும்

சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர்.

இந்தப் படம் முழுமையாகத் தயாராகி தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. சற்குணமே படத்தைத் தயாரித்துள்ளதாகச் சொல்கிறார்.

இந்நிலையில், ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் 10 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்தார்.

இந்தப் பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் சற்குணம். அதில்,

வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நான் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘களவாணி 2’. இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக உள்ள நிலையில், தனலட்சுமி பட நிறுவனத்தைச் சேர்ந்த குமரன் இடைக்காலத்தடை பெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன்.

தனலட்சுமி நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவரை நான் சந்தித்தது கூட இல்லை. ஆனால், என் படத்துக்கு ஏன் இடைக்காலத்தடை வாங்கினார் எனத் தெரியவில்லை. அவருடன் இருக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் இதுகுறித்துப் பேசினேன். “இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விமல் பிரச்சினை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காகத் தடை வாங்கியிருப்பார்கள். சரி பண்ணிக் கொள்ளலாம்” என சிங்கார வேலன் தெரிவித்தார்.

நான் கிராமத்தில் இருந்து வந்து இயக்குநராகி, மண்ணையும், மக்களின் வாழ்க்கையையும் படமாக்கி, தேசிய விருது பெற்றவன். ரிலீஸ் சமயத்தில் எனக்கு இப்படி ஒரு சிக்கல் வந்திருப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கும், அந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விமலுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர்களுக்கு இடையில் பிரச்சினை இருந்தால், அதற்கு நானோ, என்னுடைய வர்மன்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனமோ பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிமன்றத்தின் மீது நான் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால், நான் சாதாரண மனிதன். சாதாரணமானவர்கள் நிறைய உழைக்கிறோம். சாதாரண மக்களுக்கான நீதியை எப்போதுமே நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த வகையில், எனக்கான நீதியையும் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

இவ்வாறு தெரிவித்துள்ளார் சற்குணம்.

விளக்கத்தில் இயக்குநர் சற்குணம் குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுபற்றிக் கூறியிருப்பதாவது…..

விமல் தனது A3V சினிமாஸ் சார்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சொந்தமாக தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். ஆனால் அவரது அனுபவமின்மை காரணமாக நான் கொடுத்த 3 கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.

இன்னும் 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் இந்தப் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும் இல்லை என்றால் இந்தப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார் நடிகர் விமல். ஆனாலும் நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 3௦.8.2௦17 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விமல் எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த விழாவில் இயக்குநர் சற்குணம் உட்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த விழாவின்போது அடுத்ததாக தனது சொந்தத் தயாரிப்பில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒன்றை வெற்றிவேல் பட இயக்குநர் வசந்தமணி இயக்க உள்ளார் என்றும் இன்னொரு படமான களவாணி-2 வை இயக்குநர் சற்குணம் இயக்க உள்ளார் என்றும் அனைவரின் முன்னிலையில் அறிவித்தார் விமல்.

பின்னர் சில நாட்கள் கழித்து என்னை அழைத்துப் பேசிய விமல், இந்த களவாணி-2 படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் களவாணி-2 படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நீங்கள் தற்போது ஒரு படத்திற்கே தொடர்ந்து பைனான்ஸ் செய்வதாக பணம் கொடுக்க வேண்டாம். 2 படத்திற்கு பைனான்ஸ் செய்கிறீர்கள் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்.

நானும் அதற்கு ஒப்புக்கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர்-17ஆம் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

ஆனால் அதன்பின் மன்னர் வகையறா படம் வெளியான பின்பு விமலுக்கு ஏற்கனவே கடன் கொடுத்திருந்தவர்கள் அவர்களுக்குச் சேர வேண்டிய கடன் தொகையை அவருக்கு நெருக்கடி கொடுத்து வாங்கிச் சென்றனர்.. திரையுலகில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அவர்களுடன் போட்டியிட்டு விமலுக்கு நான் கொடுத்த பணத்தை கைப்பற்ற என்னால் முடியாமல் போனது.

இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்தத் தொகையை தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை.

இந்தநிலையில் தான் களவாணி-2 படம் ‘வர்மன்ஸ் புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது. நான் இயக்குநர் சற்குணத்திடமும் விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்கள் இருவரும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவே மறுத்துவிட்டார்கள்.

பட வேலைகள் முடிந்து படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பு எனக்குச் சேர வேண்டிய பணத்தை திருப்பித் தரும்படியும் அப்படி இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியிருக்கும் என்றும் கூறி விமலுக்கு மீண்டும் மார்ச்-17ஆம் தேதி கடிதம் அனுப்பினேன். அதை பெற்றுக்கொண்ட அவரிடமிருந்து அப்போதும் எந்தப் பதிலும் வரவில்லை.

அதனால் அவர்மீது வழக்கு தொடரப் போகிறேன் எனக் கூறி அதை அவருக்கு தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 8ஆம் தேதி விமல் மட்டுமல்லாது இயக்குநர் சற்குணம் உள்ளிட்டோருக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

ஆனால் அதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி-2’ படத்திற்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி-2 படத்தை வேறு யாரும் வெளியிட கூடாது என 6 வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

இந்தப் படத்தின் உரிமை எங்களிடம் தான் இருக்கிறது. இயக்குநர் சற்குணம் இந்தப் படத்தை அவர் தயாரித்ததாகச் சொல்வது சுத்தமான பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று தான் நான் இதைக் கருதுகிறேன்.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என இயக்குநர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகவே பத்திரிக்கை, ஊடகங்கள் களவாணி-2 படம் பற்றி வேறு நபர்கள் சொல்லும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு கூறியுள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன் .

Related Posts