சினிமா செய்திகள்

இயக்குநர் வசந்தபாலனின் விஷப் பரீட்சை?

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

இப்போது ஜி.வி.பிரகாஷ் கைநிறையப் படங்களோடு வெற்றிகரமாக உலா வருகிறார். வசந்தபாலனுக்குப் பட வாய்ப்புகள் இல்லை. எனவே தன்னை அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடனாக அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க தேதி கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்.

ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கும் அப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ராமகிருஷ்ணனும், பாக்கியம் சங்கரும் வசனம் எழுதுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பு அரங்கமைப்பில் மே 25 அன்று தொடங்கியது. தொடர்ந்து அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஜூலை முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறதாம்.

இப்படத்தின் கதை பற்றிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் வரவுக்குப் பிறகு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைகள் அதிகமாக வரத் தொடங்கியிருக்கின்றன.

இந்தப்படத்தின் கதையும் அடித்தட்டு மக்கள் பற்றிய கதைதானாம்.

ஏற்கெனவே கண்ணகி நகர், எழில்நகர் ஆகிய படங்களும் இதேபோன்ற கதையமைப்பைக் கொண்டு உருவாகிறதாம்.

இப்போது வசந்தபாலனும் அது போன்றதொரு கதைக்களத்தை எடுத்திருக்கிறார். பா.இரஞ்சித் அப்படிப்பட்ட கதைகளை எடுக்கிறார் என்றால் அப்பகுதியிலேயே வாழ்ந்த அனுபவம் அவருக்குக் கைகொடுக்கும்.

வசந்தபாலன் எப்படி இதை எடுக்க முடியும்? கிராமத்துக்கதைகளைப் படமாக்கி வெற்றி கண்ட பாரதிராஜா, இது போன்றதொரு கதைக் களத்தில் எடுத்த என்னுயிர்த் தோழன் படத்தின் நிலை என்னவென்பது எல்லோருக்கும் தெரியும்.

வசந்தபாலனுக்கு இதில் அனுபவம் இல்லையென்பது மட்டுமின்றி படத்துக்கு வசனம் எழுதும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் அந்த வாழ்க்கை பற்றி ஒன்றும் தெரியாது.நான் வடசென்னைக்காரன் என்ற புத்தகம் எழுதிய பாக்கியம் சங்கர் படத்தில் இருப்பது ஒரு ஆறுதல்.

ஆனால், எஸ்.ராமகிருஷ்ணன் இருக்கும்போது பாக்கியம்சங்கருக்கு சம்பளம் மற்றும் மரியாதைகள் இரண்டாம்தரமாகவே இருக்கும் என்பது இயல்பு.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்தப்படத்தில் ஒரு படைப்பாளராக வசந்தபாலன் வெற்றி அடைவாரா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Related Posts