சினிமா செய்திகள்

ரஜினியை விமர்சிக்கும் புதுமுக இயக்குநரின் துணிச்சல்

புதுமுக இயக்குநர் சீயோன் எழுதி இயக்கிருக்கும் படம் பொதுநலன்கருதி. பணக்கார வர்க்கத்துக்கும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கும் நடக்கும் பிரச்சினைகளே இந்தப்படம் என்றும்,சூழ்நிலைக் கைதிகளாய் மாறி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கும் இளைஞர்களின் கதை இது என்றும் கூறுகிறார்கள்.

அண்மையில், பாளையங்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து – சுப்புலட்சுமி மற்றும் குடும்பத்தினர் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிஜ சம்பவம் என்னை மிகவும் பாதிப்படையச் செய்தது. இப்படி சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள நிழல்தாதாக்களின் கதையே ‘பொதுநலன் கருதி’ திரைப்படம்.

இந்தப் படம் வெளிவரும்போது எனக்கு பல அச்சுறுத்தல்கள் வரும். ஆனாலும் உண்மையைச் சொல்ல பயப்படத் தேவையில்லை என்பதால் துணிச்சலுடன் இப்படத்தை எடுத்துள்ளேன். இதுபோன்ற படம் எடுப்பதால் என்னை சமூகவிரோதி (தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை ரஜினிகாந்த் சமூகவிரோதி என்றார்) என்று அழைத்தாலும் தவறில்லை என்கிறார் படத்தின் இயக்குனர் சீயோன்.

இந்தப் படத்தில் சூதுகவ்வும் கருணாகரன், சந்தோஷ், அருண்ஆதித் இவர்கள் கதையின் நாயகன்களாக நடிக்க, சுபிக்க்ஷா, அனுசித்தாரா, லிசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரங்களாக இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக் ஜாப்பி, வழக்கு எண் முத்துராமன், சுப்ரமணியபுரம் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைக் கேட்டு மக்களுக்கு நலன் பயக்கும் கதை என்பதால் இந்தப் படத்தைத் தயாரித்திருகிறார் ஏவிஆர் புரொடக்‌ஷன்ஸ் அன்புவேல்ராஜன்.

Related Posts