கோலிசோடா 2 – திரைப்பட விமர்சனம்
எளிய மனிதர்களின் வாழ்வில் வலியவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதற்கும்,
ஓடப்பராயிருக்கும்
ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டால்
ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உதையப்பர் எல்லாம் போய்
ஒப்பப்பர் ஆகிடுவார்
உணரப்பா நீ
என்கிற பாரதிதாசன் வரிகளுக்கும்
விஜய்மில்டன் கொடுத்திருக்கும் காட்சி வடிவம்தான் கோலிசோடா 2.
சிறந்த விளையாட்டு வீரனாகி அதன்மூலம் நல்ல வேலைவாய்ப்பை அடைய நினைக்கிற இசக்கி பரத், அதுவரை ஓர் உணவுவிடுதியில் ஊழியராகப் பணிபுரிகிறார்.
சென்னையில் புகழ்பெற்ற ஆட்டோ அண்ணாதுரையைப் பிரதியெடுத்த மாதிரி உயர்ந்த இலட்சியமுள்ள ஆட்டோ ஓட்டுநராக வினோத் இருக்கிறார்,
உள்ளூர்தாதா ஒருவரிடம் ஓட்டுநராகப் பணியாற்றும் பாரத்சீனி, காதல் வயப்பட்டதும் தாதாவை விட்டு விலகி நல்ல வேலை பார்த்து குடும்பஸ்தனாக வேண்டும் என்கிற எண்ணத்துடன் வெளிவருகிறார்.
இம்மூன்று எளியவர்களின் வாழ்க்கையில் அதிகாரமிக்க வார்டு கவுன்சிலர், சாதிச்சங்கத் தலைவர், தாதா ஆகியோர் எப்படி விளையாடுகிறார்கள். இவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம்.
எசக்கிபரத், பாரத்சீனி, வினோத் ஆகிய மூவரும் எடுத்துக் கொண்ட வேடங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள்.
நாயகிகளாக சுபிக்ஷா க்ரிஷாகுருப், ரக்ஷிதா ஆகியோரும் நன்று, காதல்ர்களின் நன்மைக்காகப் போராடுவதில் சுபிக்ஷாவும் க்ரிஷாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
அம்மாக்களாக வருகிற ரோகிணி, ரேகா, தாதா செம்பியன், கவுன்சிலர் சரவணசுப்பையா ஆகியோர் நடிப்பும் கச்சிதம்.
தோல்வியடைந்த முன்னாள் காவலர் இந்நாள் மருந்துக்கடைக்காரர் வேடத்தில் படம் முழுக்க வியாபித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
மூன்று நாயகர்களுக்கும் சரியான அறிவுரை வழங்குவதோடு அவர்களுக்குப் பெருமளவு ஒத்தாசையாகவும் இருக்கும் சமுத்திரக்கனி படத்துக்குப் பலம். எங்கேயும் ஓடமாட்டோம் இங்கேதான் இருப்போம் என்று சொல்லும்போது கைதட்டல் பெறுகிறார்.
இவ்வளவு நியாயங்கள் பேசுகிறவர் அவ்வப்போது மூத்தவருடன் உரையாடுவது என்ன நியாயம்?
படத்தில் கவனிக்கத்தக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார் இயக்குநர் கவுதம்மேனன். மிடுக்கும் துடிப்பும் பொறுப்பும் கொண்ட அந்த வேடத்துக்கு அவர் மிகப்பொருத்தம்.
தாழ்ந்த சாதியில் பிறந்தது என் தப்பா?, ஏழ்மையை ஒழிக்கச் சொன்னா ஏழைகளை ஒழிக்கிறாங்க, ஓடினவன் திரும்பினா? உட்பட பொறி பறக்கும் வசனங்கள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன.
அச்சுவின் இசை அங்கங்கே சிறப்பு. சில இடங்களில் வெறுப்பு. அமுதவாணனின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கின்றன்.
சாதிய ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கு எதிராக கோலிசோடா 2 படத்தில் சாட்டையைச் சுழற்றியிருக்கும் இயக்குநர் விஜய்மில்டன்… வெல்டன்.











