கசடதபற – திரைப்பட விமர்சனம்
கவசம், சதியாடல், தப்பாட்டம்,பந்தயம், அறம் பற்ற, அக்கற ஆகிய ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கதைகள் அவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ஒரே கதை. அதுதான் கசடதபற.
கவசம் கதையில் பிரேம்ஜிதான் கதாநாயகன், அவருக்கு இணை ரெஜினா. இவர்களோடு யூகிசேதுவும் இருக்கிறார். இவர்கள் மூவரை மட்டும் வைத்துக் கொண்டு சுவையாகக் கதை சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.
ரெஜினாவுக்கு பிரேம்ஜி மீது காதல் வரக் காரணமாக இருக்கும் காட்சிகள் தமிழ்த்திரைப்படம் உருவான காலத்திலிருந்தே இருக்கும் காட்சிகள் என்றாலும் அவற்றில் பிரேம்ஜி இருப்பதால் புதிதாகத் தெரிகின்றன.
சதியாடல் – அதிகாரத்துக்காக அப்பாவை மகனே கொல்லும் ஒளரங்கசீப் காலத்துக்கதை. சாந்தனு, சம்பத் ஆகியோரின் நடிப்பு மற்றும் பிரேம்ஜியின் கதையில் இருந்த புதிருக்கு விடை இருப்பது சதியாடலின் பலம்.
தப்பாட்டம் – சந்தீப் கிஷன், பிரியா பவானி சங்கர் , பஞ்சுசுப்பு ஆகியோர் முதன்மைப் பாத்திரங்கள். சமுதாயத்தில் இன்னும் இருக்கும் சாதிய வன்மத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது இதன்பலம். என்கவுண்ட்டரை எதிர்க்கும் அதிகாரி அதை ஏற்றுக்கொள்வது பலவீனம்.
பந்தயம் – ஹரீஷ்கல்யாணின் வளர்ச்சி திரைப்படங்களில் மட்டுமே நடக்கக்கூடியது. ஆனாலும் சுவாரசியம்.
அறம்பற்ற – எளிய மனிதர்களின் நேர்மையைப் பதிவு செய்யும் கதை. உழைக்கும் பெண்மணிகளின் பிரதிநிதியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார். திருடனைத் துரத்தும் ஆவேசம் அட்டகாசம்.
அக்கற – இயக்குநர் வெங்கட்பிரவுக்குள் இருக்கும் நல்ல நடிகனை அடையாளம் காட்டியிருக்கும் கதை. நம்பிக்கை துரோகத்தால் உயிரையே விடும் நேரத்திலும் அடுத்த தலைமுறைக்கு அறம்போதிப்பது அருமை. குடும்பத்தினர் அனைவரும் போனபின்பு கலங்கி உடைந்து போகும் காட்சியில் வெங்கட்பிரபுவின் நடிப்பு கண்ணீர்ப்பெருக்கு. வெங்கட்பிரபு மனைவி சிஜோரோஸ் சிறப்பு.
இந்த ஆறு கதைகளுக்கும் ஆறு தனித்தனி ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள்.
யுவன்ஷங்கர்ராஜா, சந்தோஷ்நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான்ரோல்டன் ஆகியோர் தலா ஒரு பாடல் கொடுத்திருக்கிறார்கள். அவை அந்தந்தக் கதையோடு இயைந்திருக்கின்றன.
எம்.எஸ்.பிரபு, விஜய்மில்டன், பாலசுப்பிரமணியம், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் ஆகிய ஆறு முன்னணி ஒளிப்பதிவாளர்களும் ஆளுக்கு ஒரு கதையைப் படமாக்கியிருக்கிறார்கள்.
மு.காசிவிஸ்வநாதன், ராஜாமுகமது, ஆண்டனி, விவேக் ஹர்ஷன்,பிரவீன் கே எல், ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.
நிம்மதிக்குப் பணம் முக்கியமில்லை என்று சொல்லிவிட்டு அடுத்ததே அப்பாவைக் கொன்றேனும் அதிகாரம் தேடு என்கிறார். என்கவுண்ட்டரை நியாயப்படுத்திவிட்டு உணவுக்கே வழியில்லாத நிலையிலும் சக உயிர்களுக்காகத் துடிக்கும் நாயகியைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எப்படியேனும் பொருள் தேடு பணம் சேர்த்தலே வெற்றி என்று சொல்லிவிட்டு பணமில்லை அறமே முக்கியம் என்று வெங்கட்பிரபு மூலம் சொல்கிறார்.
இவ்வாறாக தற்கால சமுதாயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, படித்த நடுத்தட்டு வர்க்க மனநிலையிலிருந்து எல்லாத் தரப்பினருக்குமான படமாகக் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன்.
கசடதபற – நல்லினம்