இயக்குநர் ஷங்கர் நடிகர் வடிவேலு மோதலில் சுமுகத் தீர்வு – நடந்தது என்ன? முழுவிவரம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு முதன்முறை கதாநாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி.2006 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் 2018 ஆம் ஆண்டு தொடங்கினார்.
முதல்பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கரே தயாரித்தார்.
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நின்றுபோனது. வடிவேலு மற்றும் படக்குழுவினர் இடையே மோதல் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோனது.
வடிவேலு ஒத்துழைப்புக் கொடுக்காததால் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை, இதனால் நட்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாகப் பலமுறை பேசியும் வடிவேலு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் வடிவேலு படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது.
சில ஆண்டுகளாக நீடித்த இச்சிக்கல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் ’23 ஆம் புலிகேசி 2′ திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
இச்சிக்கலில் இயக்குநர் ஷங்கர் நடிகர் வடிவேலு மட்டுமின்றி லைகா நிறுவனமும் மூன்றாவது தரப்பாக இருக்கிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் கொடுத்த முன்பணத்தை ஈடுசெய்யும் விதமாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டாராம். இதை இயக்குநர் ஷங்கரும் ஏற்றுக் கொண்டு வடிவேலு மீதான புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டாராம்.
இதன்படி இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி 2 படம் கைவிடப்படுகிறது. புதிய படமொன்றில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் இயக்குநர் மற்றும் செலவு உள்ளிட்ட விசயங்களை அவர்கள் பேசி முடிவு செய்துகொள்வார்கள் என்றும் முடிவாகியிருக்கிறதாம்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளோடு இயக்குநர் ஷங்கர் சார்பில் தங்கதுரையும் லைகா நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி தமிழ்க்குமரனும் நடிகர் வடிவேலுவும் கலந்து கொண்டார்களாம்.
சில ஆண்டுகளாக நீடித்த நடிகர் சிம்பு சிக்கலைத் தீர்த்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது இந்தச் சிக்கலையும் சுமுகமாகத் தீர்த்து வைத்திருக்கிறது.











