கடைசி நேரத்தில் இரத்தானது ஷங்கர் மகள் திருமணவரவேற்பு – காரணம் என்ன?
இயக்குநர் ஷங்கர்- ஈஸ்வரி இணையரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், தாமோதரன் – பத்மா இணையரின் மகன் ரோஹித் தாமோதரன் ஆகியோர் திருமணம் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.
கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தினர்.
கொரோனா பெருந்தொற்று படிப்படியாகக் குறைந்து அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Wedding Reception) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தார்.
அப்போது சொன்னபடி வருகிற மே முதல்நாள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார் இயக்குநர் ஷங்கர்.
திருவான்மியூரிலுள்ள பெரிய திருமண அரங்கில் மே 1 மாலை வரவேற்பு என்று சொல்லி பிரபலங்கள் உட்பட ஏராளமானோருக்கு அழைப்பு கொடுத்தார் இயக்குநர் ஷங்கர்.
ஆனால், நிகழ்ச்சிக்கு நான்கு நாட்கள்முன்னதாகவே வரவேற்பு நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுவிட்டதாக அனைவருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
எதற்காக நிகழ்ச்சி இரத்தானது என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.
அதேசமயம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவார் என ஷங்கர் எதிர்பார்த்திருந்த ஒரு விஐபி அந்தத் தேதியில் வரவியலாது என்பதால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.











