சினிமா செய்திகள்

விஜயகாந்த் மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வய்து 71.

அவர், சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரைக் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12 ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .

இந்நிலையில் டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமையன்று விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,இன்று (டிசம்பர் 28) அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் கடைசியாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள்,திரையுலகினர் மற்றும் திரைப்பட இரசிகர்கள் உள்ளிட்டோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவர் உடல், சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Posts