கேப்டன் மில்லர் – தமிழ்நாடு திரையரங்கு வியாபார விவரம்
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன்மில்லர்.
இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படம் 2024 பொங்கள்திருநாளையொட்டி சனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது.
செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய விநியோகப்பகுதிகள் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் இருக்கும் செண்பகமூர்த்தியின் எம் எஸ் எம் நிறுவனம் பெற்றிருப்பதாகவும்,
திருச்சி பகுதியை ராது எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாகவும்,
திருநெல்வேலி பகுதியை ஜியான் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாகவும், சேலம் பகுதியை கே.செந்தில் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் சென்னை நகரம், மதுரை, வட ஆற்காடு – தென்னாற்காடு ஆகிய பகுதிகளுக்கான அறிவிப்புகள் வரவில்லை.
ஆனால் அப்பகுதிகளுக்கும் விநியோகஸ்தர்கள் வந்திருப்பதாகவும் விலை விசயத்தில் உள்ள பேச்சுவார்த்தைகளால் அவை இறுதி செய்யப்படவில்லை என்றும் மிகவிரைவில் அப்பகுதி விநியோகஸ்தர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிடுமென்கிறார்கள்.
இப்பகுதி விநியோகஸ்தர்களை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. விலை விவரம் சொல்லப்படவில்லை, சொல்லவும் மாட்டார்கள்.
அந்த சொல்லப்படாத விலை விவரங்கள். உத்தேசமாக.
கோயம்புத்தூர் – 3.70 கோடி
செங்கல்பட்டு – 6.50 கோடி
திருச்சி – 2.40 கோடி
திருநெல்வேலி – 1.10 கோடி
சேலம் – 1.70 கோடி
ஆகிய தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாகவும்,
சென்னை நகரம், மதுரை மற்றும் வட ஆற்காடு -தென்னாற்காடு ஆகிய பகுதிகளுக்கு தலா 2.50 கோடி (சற்றேறக்குறைய) விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதனடிப்படையில் பேச்சுகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வியாபாரம், பெரும்பாலும் எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.விநியோக முறையும் உண்டு எனச் சொல்லப்படுகிறது.
இதனடிப்படையில் பார்த்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடு திரையரங்க வியாபார விற்பனைத் தொகை சுமார் 23 கோடி வருகிறது.
இவை தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தி ஆகியனவற்றின் விற்பனையும் தொடங்கியுள்ளது.அதோடு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையவெளியீடு ஆகிய உரிமைகளுக்கான பேச்சுகளும் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.












