செய்திக் குறிப்புகள்

முடக்கறுத்தான் படத்தின் கதையும் நோக்கமும்

சித்த மருத்துவர் கே.வீரபாபு, எழுதி,இயக்கி,தயாரித்து, பின்னணி இசை கோர்த்து, நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்’.

இவர், 2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றியவர்.

இந்தப்படம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் குற்றத்தைக் கருவாக வைத்து தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தில் வீரபாபு,மஹானா, சமுத்திரக்கனி, சூப்பர் சுப்பராயன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜனவரி-25,2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீரபாபு, தமிழருவி மணியன், இயக்குனர் தங்கர் பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் திரைப்படத்தில் நடித்திருந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் முதலாவதாகப் பேசிய வீரபாபு,

இந்தப் படத்தின் மூலம் சமூகத்திற்குத் தேவையான முக்கியமான கருத்துகளையும் கோரிக்கைகளையும் அரசாங்கத்திற்கும் வைத்துள்ளோம். அவையனைத்தும் குழந்தைகள் சார்ந்த வேண்டுகோளாகவே இருக்கும்.

படத்தின் கரு, குழந்தைகளைக் கடத்தி அவர்களை வைத்து சாலைகளில் பிச்சை எடுக்கும் கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டது.

அடுத்த கோவிட்-19(COVID19) பெருந்தொற்று ஏற்படுவதற்குள் அதைச்சந்திப்பதற்குச் சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளுக்கான வசதிகள் அடிப்படையிலும் தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

சுரேஷ் காமாட்சி பேசும்போது…..

வீரபாபு அவர்கள் எழுதி,இயக்கி,தயாரித்து நடிக்கப் போவதாக்க் கூறியதைக் கேட்டு அவரது தன்னம்பிக்கையைப் பாராட்டியதாகவும்,அவரது சமூகத்தின் மீதான அக்கறை அவரின் மீதான மதிப்பை அதிகப்படுத்துவதாகவும் கூறினார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது…….

தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்லத் துணிந்த சமூகக் கருத்து மிக முக்கியமானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீதான கவனத்தைச் செலுத்தாமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருந்து விடுகின்றனர். அதனால் ஏற்படும் விளைவுகளை இந்த படம் விவரிக்கிறது. கரோனா பெருந்தொற்றில் வீரபாபு பெருந்தொண்டாற்றினார்.தெலுங்குப் படமொன்றின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் நிலக்கரி உடல் முழுவதும் இருக்குமாறு நடித்ததால் ஏற்பட்ட ஒவ்வாமையை வீரபாபு தீர்த்து வைத்தார் என்றும் கூறினார்.

தங்கர் பச்சான் பேசும்போது…….

வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றியிருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்திருக்கிறார். அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்குக் கிடைத்த கொடை, தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இந்தப்படத்தை தமிழ் மக்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றார்.

படத்தின் கதாநாயகி மஹானா பேசும்போது……

வீரபாபு அவர்கள் ‘ஒன் மேன் ஆர்மி’ போல நடிப்பு,தயாரிப்பு,இயக்கம் என படத்தின் அனைத்துத் துறைகளிலும் மிகவும் சிரத்தையுடன் பணியாற்றினார். இந்தப்படம் பெண்கள் மற்றும் குழந்தைக் கடத்தலைப் பற்றிப் பேசும் படம். படப்பிடிப்பின் போது கூட மூலிகை உணவுகளைக் கொடுத்து எங்களைச் சிறப்பாக்க் கவனித்துக் கொண்டார்.மயில்சாமி,சாம்ஸ், ‘காதல்’சுகுமார்,அம்பானி சங்கர் போன்றோரது நகைச்சுவை நன்றாக வந்திருக்கிறது என்றார்.

விழா நிறைவாக படக்குழுவை வாழ்த்திப் பேசிய தமிழறிஞரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன்,

நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்த போது அவர் அளித்த சிகிச்சையால் தான் நான் இப்போது உயிருடன் உள்ளேன்.ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களைச் சந்தித்தேன்.அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

விழா நிறைவாக படக்குழுவினர் அனைவருக்கும் மூலிகைகள் நிறைந்த பைகள் வழங்கப்பட்டன.

Related Posts