சினிமா செய்திகள்

தீர்ந்தது சிம்பு படச்சிக்கல் – நேற்றிரவு நடந்தது என்ன?

சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு.கெளதம் மேனன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்தது.

அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது.

நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆர்.கே.செல்வமணி, உஷாராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

அதன்பின் முதல்கட்டப் படப்பிடிப்பில் தொழிலாளர்கள் சம்மேளனம் கலந்துகொண்டது. அதனால், இனிமேல் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதோடு, முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 25,2021) இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினருடன் சிம்பு சார்பாக தயாரிப்பாளர் ஐசரிகணேசன் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது, தயாரிப்பாளர்கள் சிவசங்கர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தேனாண்டாள் முரளி ஆகியோருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தொகையைத் தாமே கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டாராம். அதோடு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிக்கல் தொடர்பாக அவரையும் அழைத்துப் பேசி சமரசமாகப் போவதற்கும் ஐசரிகணேசன் ஒப்புக்கொண்டாராம். மைக்கேல் ராயப்பன் விசயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் சொல்லி கடிதம் கொடுத்திருக்கிறாராம்.

இதனால், தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியன சிம்பு படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதென அறிவித்துள்ளார்கள்.

அதனால், இன்று அப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts