செய்திக் குறிப்புகள்

படத்தின் பெயரும் காரணமும் இரகசியம் – சிக்னல் அட் 11.30 பட இயக்குநர் பேட்டி

இயக்குநர் மலர்விழி நடேசனின் முதல்படம் திருவாளர் பஞ்சாங்கம்.அதையடுத்து அவர் இயக்கியிருக்கும் படம்,’சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார்.நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன் ஜெயப்பிரகாஷ்,முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார்.ஷெரிப் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

மலர்விழி நடேசன் கதை எழுதி இயக்கி,ஏசர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்திருக்கும் இப்படத்தின் இணைதயாரிப்பாளராக டாக்டர்.சிவானி சுப்பிரமணி பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது.இப்போது அதற்குப் பிறகான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்,படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் டாக்டர்.சிவாணி சுப்பிரமணி கூறியதாவது….

நான் ஜெர்மனியில் படித்து வருகிறேன்.விடுமுறைக்காக வந்தபோது என் அம்மா படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச் சென்றார்.அப்போதுதான் அவர் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.அவரது ஆர்வம் மற்றும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே நான் தயாரிப்புப் பணியை கவனிக்க முடிவுசெய்தேன்.இது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது என்றார்.

நாயகி பவ்யா ட்ரிகா கூறியதாவது….

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்பட வாய்ப்பு வந்தது.இந்தப்படத்தில் என் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் நிறைந்தவையாக இருக்கும்.இதில் நடிப்பதற்காக நான் ஸ்கூட்டர் ஓட்டப்பழகினேன்.நிஜத்தில் என்னை ஸ்கூட்டர் ஓட்ட என் அம்மா அனுமதிப்பதிக்கவில்லை.இந்தப்படத்திற்காக கற்றுக்கொண்டு வேகமாக ஸ்கூட்டர் ஓட்டினேன்.அதுவே எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.

இயக்குநர் மலர்விழி நடேசன் கூறியதாவது….

நான் பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன்.ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.பள்ளி நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கான கதை எழுதுவது, அவர்களுக்கான வசனம் மற்றும் உடை வடிவமைப்பு,நடிப்புப்பயிற்சி கொடுப்பது ஆகியவற்றின் மூலம் எனக்கு திரைப்படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.அப்படித்தான் இயக்குநராக வேண்டும் என்று விரும்பினேன்.நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை.ஆனாலும் நம்பிக்கையாக இறங்கினேன்.திருவாளர் பஞ்சாங்கம் படம் என் முதல்படம்.இது என் இரண்டாவது படம்.

11.30 மணியளவில் ஒருவரது வாழ்வில் நடக்கும் சம்பவம்தான் இந்தப்படத்தின் கதை.தனிப்பட்ட நபரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை எந்த அளவுக்குப் புரட்டிப்போடுகிறது என்பதைத்தான் படம் பேசுகிறது.ஒருமுறை காரில் பயணித்தபோது,சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோதுதான் எனக்கு இந்தக் கதைக்கரு தோன்றியது.அதனால்,அதையே தலைப்பாக வைத்துவிட்டேன்.படத்தில் நீங்கள் எதிர்பார்த்த விசயங்களும்,எதிர்பார்க்காத விசயங்களும் இருக்கும்.ரொமாண்டிக் திரில்லர் ஜானர் படமாகவும் இருக்கும்.
11.30 மணி என்பது இரவா அல்லது பகலா? என்பதை நான் குறிப்பிடவில்லை.அதுவும் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்றுதான் சொல்லவில்லை.நீங்கள் படம் பார்க்கும்போது அது தெரியும்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சிறு சம்பவம்,அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் கதை.அதை மர்மம் கலந்து சொல்லியிருக்கிறோம்.இது நாம் அனைவரும் கடந்து செல்லும் ஒரு சம்பவம்தான்.அனைவரது வாழ்விலும் நடந்திருக்கலாம்.அப்படி நடந்தால் என்னவெல்லாம் ஆகும் என்பதைக் கற்பனையாகச் சொல்லியிருக்கிறேன்.
இந்தப்படத்தில் நடிக்க, அன்பு,முரட்டுத்தனம்,ஹான்ஸம் ஆகிய எல்லா அம்சங்களையும் கொண்டிருப்பவரை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.அப்படி நினைத்துத் தேடியபோது கிடைத்தவர்தான் சந்தோஷ் பிரதாப்.அவர் இந்தக்கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று தோன்றியது.அவரிடம் பேசியபோதும் சரியாக இருந்ததால் அவரை ஹீரோவாக்கி விட்டோம்.பவ்யா ட்ரிகாவும் அப்படித்தான்,எங்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தார்.மற்றொரு நாயகி கதாபாத்திரத்திற்கான தேர்வில்தான் கொஞ்சம் சிரமப்பட்டேன்,பிறகு பூஜிதாவை ஒப்பந்தம் செய்தோம்.சிக்னலில் படப்பிடிப்பு நடத்துவது சிரமாக இருந்தது. குறிப்பிட்ட சிக்னலில் படப்பிடிப்பு நடத்தும்போது,ஒவ்வொரு முறையும் எதாவது பிரச்சனை வரும்.அதை சமாளித்து அந்தக்காட்சியைப் படமாக்கியிருக்கிறோம்.சிக்னல் படத்தில் முக்கியபங்கு வகிப்பதோடு,ஒரு கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் இடம்பிடிக்கும்.
படம் முழுவதுமாக முடிவடைந்து விட்டது.தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.விரைவில் படத்தின் டிரைலரை வெளியிடவிருக்கிறோம்.அதன்பிறகு படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம் என்றார்.

நாயகன் சந்தோஷ் பிரதாப் படம் பற்றிக் கூறியதாவது….

நான் 12 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறேன்.30 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.எனக்கென்று தனி பேஷன் இருக்கிறது.அப்படித்தான் இயக்குநருக்கும்.அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.நான் கதையில் அல்லது காட்சிகளில் என்னுடைய யோசனையை சொல்லும்போது,அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார்.நான் இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக இருக்கும்.இந்தப்படமும் அப்படித்தான் இருக்கும்.
என் கதாபாத்திரம் நெகட்டிவ்ஷேட் கொண்டதாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாது.ஏனெனில்,அதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.இப்படிப்பட்ட வேடங்களில் நான் தொடர்ந்து நடிக்கக் காரணம்,மற்றவர்கள் இந்தமாதிரி வேடங்களில் நடிக்க மறுப்பதால்தான்.என்னைத் தேடி இப்படிப்பட்ட வேடங்கள் வருகின்றன.கதாபாத்திரமாக வித்தியாசமாக இருப்பதால் இப்படிப்பட்ட வேடங்களில் நடிக்கிறேன்,இந்தப்படத்தின் கதாபாத்திரத்திலும் நீங்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் இருக்கும்.அனைவருக்கும் அது பிடிக்கவும் செய்யும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts